Friday 22 March 2013

பரதேசி - வாழவிடுங்க நியாயமாரே!



"நரகக் குழியில வந்து விழுந்துட்டியே அங்கம்மா" என்ற வசனத்துடன் முடியும் இந்தப்படம் அனைவரின் இதயத்தையும் கனக்கச் செய்யும். தீராத வலியுடனேயே திரையரங்கத்தை விட்டு அகலச்செய்யும். ஒவ்வொரு முறை டீயை உறிஞ்சும் போதும், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் ரத்தத்தைக் உறுஞ்சுறோம் என்ற நினைவை ஏற்படுத்தும். ஒரு அவலச்சுவை திரைப்படம் இப்படி இரண்டரை மணிநேரம் ஒரு மனிதனைக் கட்டிப்போட்டு வைக்க முடியும் என்றால், அதுதான் பாலாவின் சாதனை.


ஆங்கிலேயரிடம் கட்டுண்டு கிடந்த இந்தியாவில், தென்னகத்தில், மதராஸ் சமஸ்தானத்தின் தெற்கே இருக்கும் சாலூர் கிராமத்தின் மக்கள், பஞ்சம்பிழைக்க மலைச்சாரல் தேயிலைத் தோட்டங்களுக்கு கூலிகளாகப் போகிறார்கள். அங்கே மனம் நிறைந்த கனவுகளோடு சென்று, கூலி கொடுக்கப்படாமல் ஏமாற்றப்பட்டு, விடுபடமுடியாத அடிமைகளாக சாகும் வாழ்க்கையை கண்ணீர் வற்ற காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் பாலா. அடிமையாகவே இருப்பது, அல்லது சாவது, இவை இரண்டே அவர்களுக்கான வழியாக இருந்ததையும். காப்பாற்றுகிறோம் என்று சொல்பவர்கள் அனைவரும் தங்களை வஞ்சிப்பதையே அனுபவிக்கும் மக்களின் கதைதான் "பரதேசி"

படத்தின் ஆரம்பத்தில் அதர்வாவின் நடிப்பு, சூர்யாவைப் பிரதிபலிக்கிறது. முடிந்தமட்டும், தன்னாலான அளவு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் அதர்வா. "நியாயமாரே, நியாயமாரே" என்று அவர் கதறும் காட்சிகள் எல்லாம், ஆதிக்கச்சாதிக் காரர்களின் மனசாட்சியைக் கண்டிப்பாக உலுக்கி எடுக்கும். குறிப்பாகக் கடைசிக் காட்சியில், "தாயில்லாப் பிள்ளை நியாயமாரே. நாதியத்த சென்மம் நியாயமாரே" என்று கதறும் காட்சியிலும், அதைத் தொடர்ந்து, இதுவரைப் பார்க்காத தன் மகனைக் கண்ட மகிழ்வுபோய், "நரகக்குழியில வந்து விழுந்துட்டியே அங்கம்மா" என்று கதறும் காட்சியிலும் உண்மையிலேயே வாழ்ந்து காட்டியிருக்கிறார் அதர்வா.

வேதிகா படத்தின் பாதி வரை குறும்புக்காரப் பெண்ணாகவும், கடைசிக் காட்சியில் கணவனை வெகுகாலம் கழித்துக் காணும் பெண்ணின் உணர்வுகளை வெளிப்படுத்தியும் தன் நடிப்புத் திறமையைக் காண்பித்திருக்கிறார்.

அதர்வாவுக்கு வரும் கடிதத்தை, மருத்துவர் படித்துக் காட்டும்போது, தனது முகமாறுதல்களில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் தன்சிகா, அதர்வாவின் கால் எலும்பு வெட்டப்பட்டு வாசலில் கிடத்தப்படும்போது கதறும் கதறலில், அது சினிமா அல்ல நேரடிக் காட்சியைக் காண்கிறோம் என்று நம்மை மறக்கச் செய்கிறார்.

கங்காணியாக நடித்திருக்கும் ஜெர்ரி தன் பாத்திரத்திற்கு நீதி செய்திருக்கிறார்.

படத்தின் ஆரம்பத்தில் அதர்வாவின் பெரியப்பாவாக வருபவரும், அதர்வாவின் பாட்டியாக வரும் அம்மையாரும் சிறப்பாக நடத்திருக்கிறார்கள்.

பரிசுத்தவான் என்ற ஒரு பாத்திரத்தை வைத்து, (எரியும் பனிக்காட்டில்) சொல்லப்படாத வரலாற்றையும் பதிவு செய்கிறார் பாலா. இங்கேதான் முற்போக்கு பேசும் பகுத்தறிவுவாதிகளின் எதிர்ப்பைச் சம்பாதிக்கிறார். யாரும் சொல்லத்துணியாத இந்தப் பரிசுத்தவான்களின் செயல்களையும் துணிச்சலாகப் பதிவு செய்து, தனது நேர்மையைப் பறைசாற்றியிருக்கிறார் பாலா.

1969ல் Red Tea என்று ஆங்கிலத்தில் வெளிவந்த நாவலைக் கருவாகக் கொண்டு இத்திரைப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. அந்நாவலை Paul Harris Daniel என்பவர் எழுதினார். இந்தப் படத்தில் வரும் பரிசுத்தவான்தான் அவர் என்று பலர் சொல்கிறார்கள். நான் அந்த நாவலைப் படிக்கவில்லை ஆகையால், அது அப்படித்தானா என்பது தெரியவில்லை. Red Tea தமிழில் "எரியும் பனிக்காடு" என்ற தலைப்பில் இரா.முருகவேளால் மொழியாக்கம் செய்யப்பட்டது. 

எஸ்.இராமகிருஷ்ணனின் எரியும்பனிக்காடு விமர்சனத்தைப் படித்துப் பார்த்தால், நாவலின் மாந்தர்கள் வேறு, படத்தின் மாந்தர்கள் வேறு என்று படுகிறது. "1940 ம் ஆண்டுகளில் தலைமை மருத்துவ அதிகாரியாக வால்பாறை காரமலை எஸ்டேட்டில் கால் பதித்த டேனியல் (Paul Harris Daniel) அங்கு நிலவிய சகிக்க முடியாத மனிததன்மையற்ற சூழலைக்கண்டு அதை எதிர்த்துக் குரல் தந்ததோடு தென்னிந்திய தோட்ட உத்தியோகிஸ்தர்களின் சங்கம் என்ற ஒன்றையும் நிறுவி தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்காக துணை நின்றிருக்கிறார்." என்று பதிவு செய்கிறார் எஸ்.இராமகிருஷ்ணன்.

பரதேசி படத்தைப் பார்த்துவிட்டு "ஆகா! பாலா டேனியலுக்கு துரோகம் செய்துவிட்டார்." என்கிறார்கள் முற்போக்கு பேசும் பகுத்தறிவுவாதிகள். பாலா படத்தின் ஆரம்பத்திலேயே Inspired by Red Tea Novel என்றுதான் போடுகிறாரே தவிர. நாவலையே படமாக எடுப்பதாகப் போடவில்லை. மேலும், நாவலின் கதை மாந்தர்களும், படத்தின் கதை மாந்தர்களும் வேறு வேறாவர், சூழ்நிலைகள் வேறு சம்பவங்கள்தான் ஒன்று. அந்த நாவலில் பதிவு செய்யாத சில முக்கிய அவலங்களையும் (பரிசுத்தவான் தான் டேனியல் என்றால், டேனியல் எப்படி அதைக் குறிப்பிட முடியும்) பாலா படத்தில் பதிவு செய்திருக்கிறார். 

படம் எல்லா வகையிலும் சிறந்திருந்தாலும், பின்னணி இசையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். நிறைய காட்சிகளில் இசை கவனத்தைக் கெடுக்கிறது. இளையராஜா இந்தப் படத்தில் இல்லாதது ஒரு குறையே. மற்றபடி பாடல்கள் அனைத்துமே அருமையாக இருக்கின்றன.

பிதாமகன் படத்தைப் போன்ற ஒரு முடிவைச் சொல்லியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் (ஆனால் இயல்பாக இருந்திருக்குமா என்று தெரியவில்லை). முடிவில்லாமலேயே முடிகிறது படம். எனினும், அப்படி முடிவில்லாமல் இருப்பதால், காண்பவர்களைச் சிந்திக்க வைக்க முடிகிறது என்றால், முடிவு சொல்லாமல் விட்டதே சிறந்தது.

உழைப்பாளர்களின் கதையைக் காட்ட, அனைவரையும் கடுமையாக உழைக்க வைத்திருக்கிறார் பாலா. 

உழைப்புக்கேற்ற கூலியைப் போராடிப் பெரும் இச்சூழ்நிலையில், உழைப்புக்கு கூலியே கிடைக்காத அந்த காலத்தில், மொத்தமாகச் சுரண்டப்பட்ட கூலித் தொழிலாளர்களின் நிலையைக் காட்டி, உழைப்பின் மதிப்புதான் என்ன என்று செஞ்சிந்தனைக்காரர்களை விட அதிகமாகச் சிந்திக்க வைக்கிறார் பாலா. நிச்சயம் நாம் இப்படிப்பட்ட படங்களுக்கு அவர்களின் உழைப்புக்கேற்ற கூலியைக் கொடுக்கவிட்டாலும் (நாமும் கங்காணிகள்தானே) மதிப்பையாவது கொடுக்க வேண்டும்.

சில பதிவர்களால் சுட்டிக்காட்டப்படும் நியாயமான குறைகள்
1. 1930களில் கருவேல மரங்களில் தமிழகத்தில் இல்லையே, பஞ்சம் பிழைக்கப் போகும் கூட்டம் கடக்கும் வெளிகளில் கருவேல மரங்கள் இருக்கின்றனவே.
2. ராசாவின் பெரியப்பா இறந்த பிறகு, எல்லோரும் அதை  மறைக்கிறார்கள். அதன்பிறகு உணவளிக்கப்படாமல் இருக்கும் அதர்வா, அதற்காக அழுவதும், அதைக் கண்டு நாயகி பரிதாபப்படுவதும், அதன் பிறகு டூயட்டும் என நீளுகின்றன காட்சிகள், ஆனால் அதன் தொடர்ச்சியாக பெரியப்பாவை என்ன செய்தார்கள் என்று காட்டவில்லை. பெரியப்பா இறந்தது ராசாவுக்கு (அதர்வாவுக்கு) தெரியுமா? தெரியாதா?

இப்படி புறந்தள்ளக்கூடிய சில குறைகள் இருந்தாலும், அவசியம் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் "பரதேசி".

18 comments:

  1. எனக்கு என்னமோ படம் பார்க்க தோணவில்லை

    ReplyDelete
    Replies
    1. பார்த்தால் டீக்கு பின்னால் இருக்கும் வலி தெரியும். இல்லை நான் காப்பிக்காரன் டீ குடிப்பதில்லை என்று சொன்னால் நாம் என்ன செய்வது.

      வந்த மறுமொழி கொடுத்ததற்கு நன்றி நண்பரே!

      Delete
  2. பரிசுத்தம் என்னும் கதாபாத்திரம் தான் உண்மையான கதாநாயகன். அதை மறைத்து, திரித்து வேறு எதையோ சொல்லி இப்படி செய்து விட்டார்களே நியாயமாரே! ........
    கதை மாறலாம் சரித்திரம் மாறுமா? சரித்திரம் சரித்திரம்தான். உண்மை உண்மைதான்.

    ReplyDelete
    Replies
    1. பரிச்சுத்தவான்கள் வரலாற்றை மறைத்ததில் சிறு வெளிச்சத்தைத் தான் காட்டியிருக்கிறார் பாலா. இன்னும் முழுவதும் வெளிப்படவில்லை.

      படத்தைப் பார்த்தபிறகும் பரிசுத்தம் கதாநாயகன் என்கிறீர்களே, அதற்கு நாம் என்ன சொல்வது?

      சரித்திரம் மாறாது? மறைக்கப்பட்ட சரித்திரம் வெளிச்சத்துக்கு வரும்வரை! சரித்திரம் சரித்திரம்தான். உண்மை உண்மைதான். ஆனால் சரித்திரத்தையும் உண்மையையும் முழுமையாகச் சொல்ல வேண்டுமே.

      Delete
    2. நீங்க கேலி கூத்து மாதிரி ஒரு சரித்திர உண்மை நாயகனை கொச்சைப்படுத்தினால், அது உண்மையாகிவிடுமா? அம்மக்களின் துயர் துடைக்க,உண்மையாக களம் கண்டு, அம்மக்களின் வேதனையை வெளியுலகத்திற்கு கொண்டுவந்து, அடிமைகளானவர்களின் வாழ்வில் விடியலை கொண்டுவந்த பரிசுத்தம் கதாநாயகன்தான். உங்கள் கூற்றுப்படி பரிசுத்தவான்கள்தான். சரீர, ஆத்மீக விடுதலை அன்றும் இன்றும் தேவைதான். உலைவாயை ரொம்ப நேரம் மூடமுடியாது................

      Delete
    3. கேலிக்கூத்தா? கொச்சைப்படுத்ததுலா? பரிசுத்தத்தைக் கதாநாயகன் என்று ஏற்றுக் கொள்வதில் எந்தச் சிக்கலும் இல்லையே. அவர்தான் அவர்களின் விடுதலைக்குக் காரணமானவர். ஆனால், அப்படிப்பட்ட அந்த நல்லக் கதாநாயகனும், தன் நம்பிக்கைகள் அந்த ஒன்றுமறியா மக்களுக்குத் திகட்டத் திகட்டத் திணித்தார் என்பதே வரலாறு. சொல்லப்படாத உண்மை.

      Delete
    4. நல்ல மருத்துவ சேவையோடு கூட அவர் சரீர , ஆத்மீக விடுதலையை (உங்கள் பாஷையில் மத மாற்றம்) செய்தார் என்று சொல்லியிருந்தாலும் பரவாயில்லையே, அடிமைத்தனத்துக்குள்ளனவர்களுக்காக ஒருவரின் உண்மையான போராட்டத்தையும், சேவையையும் திசைதிருப்பி, மருத்துவரின் உண்மையான சேவையை கேவலப்படுத்தின செயலை செய்த உங்கள் பாலாவுக்கு மறுபடியும் வக்காலத்து வாங்க போகிறீர்களா? மதத்தை தாண்டி மனசாட்சியோடு, மனிதநேயத்துடன் சொல்லுங்க பாலா செய்தது மாபெரும் தவறு இல்லையா?

      Delete
    5. கண்டிப்பாக வக்காலத்து வாங்குவேன். அவர் செய்தது தவறே இல்லை. அதிலென்ன மாபெரும் தவறு? அது துணிச்சல். அது நேர்மை. அது உண்மை.

      ஆனால், நீங்கள் சொல்லும் மருத்துவர், அவரே எழுதியிருக்கும் நாவலில் எப்படிச் சொல்லியிருக்கிறார் என்பதை கவனியுங்கள். அவர்கள் ஆத்மீக விடுதலையோ (உங்கள் பாஷையில் - மனமாற்றம் {மதமாற்றமே}) சமூக விடுதலையோ அடைய பாடுபடவேண்டும் வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை. மாறாக என்ன செய்தார் என்று அவர் சொல்லியதையே கீழே தருகிறேன்.

      //மருத்துவராக வருபவர் தான் இந்த நூலின் ஆசிரியராக இருக்க வேண்டும். இவர் வந்து இங்குள்ள நிலையைப் பார்த்த பிறகு வெறுத்து, தான் இங்கு இருக்கப்போவதில்லை கிளம்பப் போகிறேன் என்று கூறுகிறார். பின்னர் இங்குள்ளவர்கள் சமாதானப்படுத்துகிறார்கள். தான் இங்கே இருக்க வேண்டும் என்றால் துரைக்கு சலாம் போட முடியாது (இங்கே மூச்சு முன்னூறு வாட்டி “சரி துரை அவர்களே!” என்று கூற வேண்டும்) அவர் கூறுவது படி எல்லாம் என்னால் நடக்க முடியாது, மருத்துவமனை மிக மோசமான நிலையில் உள்ளது இதை சரி செய்ய வேண்டும். இதெல்லாம் சரி என்றால் நான் தொடர்கிறேன் என்று கூறுவார்.//

      மேற்கண்ட வாசகத்தை நீங்கள் சுட்டிக்காட்டிய http://www.giriblog.com/2013/03/eriyum-panikadu-book-review.htmlல் இருந்தே எடுத்தேன்.

      Delete
    6. //மருத்துவராக வருபவர் தான் இந்த நூலின் ஆசிரியராக இருக்க வேண்டும். இவர் வந்து இங்குள்ள நிலையைப் பார்த்த பிறகு வெறுத்து, தான் இங்கு இருக்கப்போவதில்லை கிளம்பப் போகிறேன் என்று கூறுகிறார். பின்னர் இங்குள்ளவர்கள் சமாதானப்படுத்துகிறார்கள். தான் இங்கே இருக்க வேண்டும் என்றால் துரைக்கு சலாம் போட முடியாது (இங்கே மூச்சு முன்னூறு வாட்டி “சரி துரை அவர்களே!” என்று கூற வேண்டும்) அவர் கூறுவது படி எல்லாம் என்னால் நடக்க முடியாது, மருத்துவமனை மிக மோசமான நிலையில் உள்ளது இதை சரி செய்ய வேண்டும். இதெல்லாம் சரி என்றால் நான் தொடர்கிறேன் என்று கூறுவார்.

      துரை, வேறு வழியில்லாமல் மருத்துவரின் நிபந்தனைகளுக்கு வேண்டா வெறுப்பாக ஒத்துக் கொள்கிறார். இதற்கு காங்கிரசின் வளர்ச்சியும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. ஆங்கிலேயர்கள் பெரிய ஆளாக இருந்தாலும், காங்கிரஸ் அதில் உள்ள காந்தி மற்றும் பல தலைவர்களின் போராட்டங்கள் எதிர்ப்புகளுக்கு பயந்தே இருந்து இருக்கிறார்கள் என்பதையும் காட்டுகிறது. இங்கு பலர் இறக்கிறார்கள் என்று வெளியே தெரிந்தால் காங்கிரஸ் போராட்டம் செய்யக்கூடும் என்ற பயமே காரணம்.//

      from: http://www.giriblog.com/2013/03/eriyum-panikadu-book-review.html

      பார்த்தீர்களா? காங்கிரசின் வளர்ச்சியும் அவர்களின் விடுதலைக்கு ஒரு காரணமாம்.

      Delete
    7. உண்மையான சம்பவத்தை அதாவது "எரியும் பனிக்காடு" நாவலை படித்துவிட்டு இருவரும் விவாதத்தை தொடருவோம். உல்டாக்ளை பார்த்து விவாதம் வேண்டாம்.

      Delete
    8. எரியும் பனிக்காடு நாவலும் உண்மையும் கற்பனையும் கலந்ததே என்று அதன் ஆசிரியரே கூறியிருக்கிறார். அதில் எது உண்மை என்றால் தொழிலாளர்களின் கஷ்டமே. தனி நபர் விமர்சனங்களும், துதிபாடல்களும், ஆசிரியர் கற்பனை பாத்திரங்கள் மூலமே நிறுவுகிறார் என்று கதையைப் படித்தவர்கள் சொல்கிறார்கள். நாவல் விலை. ரூ.150/-ஆம். வாங்கிப் படிப்போம்.

      Delete
  3. http://www.rahimgazzali.com/2013/03/paredesi.html
    இதையும் படிங்க.

    ReplyDelete
    Replies
    1. சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்

      Delete
  4. நண்பர் ஒருவர் பரதேசி குறித்து ஒரு விமர்சனம் எழுதியிருந்தார். அதற்கு எனது மறுமொழிகளையும், அவரது பதில்களையும் கொஞ்சம் கவனியுங்களேன்பரதேசி-தேனீர்-கோப்பையில

    ReplyDelete
  5. http://www.tamilpaper.net/?tag=%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81

    ReplyDelete
    Replies
    1. //பாலா தேவர் என்பதால், தேவர்கள் மீதான விமர்சனத்தை முன்வைக்க அவருடைய சாதிப்பாசம் தடுத்துவிடுகிறது. மேலும் நாவலில் தலித்களைக் கொடுமைப்படுத்தும் கங்காணியாக வருவது ஒரு தலித். அதையும் தெளிவாகச் சித்திரிக்காமல் விட்டுவிடுகிறார். அப்படியாக, இது யதார்த்தப் படம்தான். ஆனால், யதார்த்தம் இருக்காது. இது ஒரு மனிதனை உடம்பில்லாமல் சித்திரிப்பதைப் போன்றது.//

      இந்த மேற்கண்ட வரிகள் போதும். ஏன் விமர்சகர் படத்தை மட்டமாக விமர்சித்திருக்கிறார் என்பதற்கு. சாதிச்சண்டையை ஆவலாக எதிர்பார்ப்பவர்களுக்குத் தீனிப்போடவில்லை அல்லாவா? பாலா திறமையற்றவர்தான்.

      Delete
  6. http://www.giriblog.com/2013/03/eriyum-panikadu-book-review.html

    ReplyDelete
    Replies
    1. எரியும் பனிக்காடு குறித்த இந்த விமர்சனம் நன்றாக இருக்கிறது. ஆனால் பாலா கதையில் இருந்து பிசகிவிட்டதாகப் பொருள் ஆகாதே.

      புத்தகத்தின் கரு முழுவதுமாக படத்தில் வந்துவிட்டதாகக் கருதுகிறேன்.

      பரதேசி படத்தில் வரும் ஒட்டுப்பெறக்கியின் நண்பன் தான் (கருப்பன்) இந்த நாவலில் (எரியும் பனிக்காட்டில்) கதாநாயகன். ஒட்டுப்பெறக்கி, ஒட்டுப்பெறக்கியின் காதலி (கதையின் நாயக நாயகிகளே) பாலாவின் கற்பனை. மற்றபடி மேற்கண்ட விமர்சனத்திற்கு பாலா நியாயம் கற்பித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

      Delete

நான் என் கருத்துகளைப் பதியவே (என் குரலைப் பதிவு செய்யவே) வலைப்பூப்பதிவுகளை இடுகிறேன்.

கண்ணியக்குறைவான மறுமொழிகளை வெளியிட இயலாது.

சில மறுமொழிகளுக்கு நான் பதிலளிக்கவில்லை என்றால், ஒன்று எனக்கு பதில் தெரியவில்லை அல்லது போராடிப் பயனில்லை (இந்தப் பழம் புளிக்கும்) என்ற எனது நிலையே.