சமீபத்தில்
இந்தித் திரைப்படம் OMG: Oh My God பார்க்க நேர்ந்தது. படம் சிந்திக்கத்தூண்டும் வகையில்
இருந்ததால் ஒரு பதிவு எழுத நினைத்து ஆரம்பிக்கிறேன்.
காஞ்சிலால்
மேத்தா (பரேஷ் ராவல்) ஒரு நடுத்தர வர்க்க இந்து நாத்திகவாதி. வீட்டிலும் சரி
வெளியிலும் சரி அவர் நாத்திகம் பேசியே அனைவரையும் கிண்டலடிப்பார். வீட்டில் மனைவி
மிகுந்த பக்திமான். கணவர் செய்யும் செயல்களை அவர் பரிதவிப்புடனேயே பார்க்கிறார்.
காஞ்சிலால்
இந்து கடவுளர் சிலைகளை விற்கும் ஒரு கடையை மும்பை சோர் பஜாரில் நடத்தி வருகிறார்.
ஒரு நாள் அந்த நகரில் பூகம்பம் ஏற்படுகிறது. அது நகருக்குப் பெரிய பாதிப்பை
ஏற்படுத்தவில்லை. ஆனால் காஞ்சிலாலின் கடைக்கு முழு நாசத்தை ஏற்படுத்துகிறது.
அடுத்த
நாள், காஞ்சிலால் காப்பீடு நிறுவனத்திற்குச் சென்று, காப்பீட்டுத் தொகையைப் பெற
மனு கொடுக்கிறார். காப்பீட்டு அதிகாரி இயற்கை சீற்றங்களுக்கு காப்பீடு கொடுக்க
முடியாது, கடவுளின் செயலால் (Act of God) ஏற்படும் எந்த பாதிப்பிற்கும் காப்பீடு தர முடியாது
என்று ஒப்பந்தத்தில் இருப்பதைச் சுட்டிக்காட்டி பணம் தர மறுக்கிறார்.
காஞ்சிலால்
மேத்தாவுக்கு வேறு வழி தெரியாமல், கடவுளின் மேல் வழக்கு போட வழக்கறிஞரைத்
தேடுகிறார். யாரும் கிடைக்கவில்லை. கடைசியாக, ஹனீஃப் குரேசி (ஓம் பூரி) என்ற ஏழை
இஸ்லாமிய வழக்கறிஞரைச் சந்திக்கிறார். அந்த வழக்கறிஞர், கலவரத்தில் அப்பாவி
இந்துக்களுக்காக வாதாடச் சென்று தனது கால்களைத் தனது மக்களே வெட்டி எடுத்ததைச்
சொல்லி, "நீ உனது கடவுள் மீதே வழக்கு தொடரப்போகிறாயா?" என்று
கேட்கிறார். காஞ்சிலால் உறுதியுடன் இருக்கவே, காஞ்சிலாலே அவருக்காக வாதாடிக் கொள்ள
தக்க உதவிகளைச் செய்கிறார் ஹனீஃப் குரேசி. காப்பீடு நிறுவனத்திற்கும், கடவுளின்
பிரதிநிதிகளாக தங்களைச் சொல்லிக் கொள்ளும் சித்தேஸ்வர் மகராஜ் (கோவிந்த் நம்தியோ),
கோபி மைய்யா (பூனம் ஜாவர்) மற்றும் அவர்களது தலைமை யோகி லீலாதர் சுவாமி (மிதுன்
சக்ரவர்த்தி) ஆகியோருக்கும் வக்கீல் அறிக்கை அனுப்பப் படுகிறது.
வழக்கு
ஆரம்பத்திலேயே எதிர்தரப்பு வக்கீல் சர்தேசாய் (மகேஷ் மஞ்சரேக்கர்) நீதிபதியை
வழக்கை தள்ளுபடிச் செய்யச் சொல்கிறார். ஆனால் காஞ்சிலால், இந்த மத அமைப்புகள்
தங்களை கடவுளின் பிரதிநிதிகளாக இந்த உலகில் அறிவித்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆகையால், அவர்கள் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று
நிர்பந்திக்கிறார். நீதிமன்றம் காஞ்சிலாலின் வாழ்க்கையை நிர்ணயிக்கும் வழக்காக
இதைக் கருதி வழக்கை ஏற்றுக் கொள்கிறது. நீதிமன்றத்தை விட்டு வெளிவருகையில்
சாமியார்களிடமும், பழமைவாதிகளிடமும் அகப்பட்டு துன்புறுகிறார் காஞ்சிலால் மேத்தா.
அப்போது
கிருஷ்ணா (அக்ஷய் குமார்) காஞ்சிலாலின் உதவிக்கு வந்து அவரை தப்புவிக்கிறார். வீட்டிற்கு
வந்தால், மனைவியும் மக்களும் இனியும் உன்னோடு வாழ முடியாது என்று சொல்லிவிட்டு
அவரை விட்டுப் பிரிகின்றனர். காஞ்சிலால் மிகுந்த துயரத்துடன் படுக்கச் செல்கிறார்.
காஞ்சிலால்
தனது கடைக்காக, மார்வாடியிடம் அடகு வைத்திருந்த வீட்டை கிருஷ்ணாவிடம்
விற்றுவிட்டதாக கிருஷ்ணா சொல்கிறார். இருந்தாலும், காஞ்சிலாலைத் தன்னுடன் தங்க
அனுமதிக்கிறார்.
வழக்கு
சம்பந்தமாக மீடியா காஞ்சிலாலை பேட்டி எடுக்க வருகையில் அதைப் புறக்கணிக்கிறார்
காஞ்சிலால். கிருஷ்ணா நீ மீடியாவுக்குச் சென்று புரிய வை என்று காஞ்சிலாலை
அனுப்புகிறார். காஞ்சிலாலின் பார்வை பெரும்பகுதி மக்களுக்குப் புரிகிறது. இதேபோன்ற
(Act of God) வழக்குகளோடு நிறைய பேர் அவரை வாதாடச் சொல்கின்றனர்.
அவற்றையும் ஏற்றுக் கொண்டு வாதாடுகிறார். இம்முறை கத்தோலிக்க பாதிரிமார்களையும்,
இஸ்லாமிய முல்லாக்களையும் வழக்கில் இணைக்கிறார். வழக்கறிஞர் சர்தேசாய், காஞ்சிலால்
இந்த வழக்கில் கடவுளின் தலையீடு இருப்பதா நிரூபிக்க வேண்டும் என்று கோருகிறார்.
நீதிபதி அதை எழுத்துப்பூர்வமான ஆதாரமாக சமர்ப்பிக்க கட்டளையிடுகிறார்.
காஞ்சிலால்
வழக்கில் நம்பிக்கையிழக்கிறார். அப்போது கிருஷ்ணா பகவத் கீதையைக் கொடுத்து படிக்கச்
சொல்கிறார். "அடப்போப்பா, ஒரு படமும் இல்லாமல், வெறுமனே வார்த்தைகளாக
இருப்பதை யார் படிப்பார்" என்று அதைப் புறக்கணிக்கிறார் காஞ்சிலால். பிறகு
கிருஷ்ணாவின் நிர்பந்தத்தால், அதைப் படிக்கிறார். பிறகு கிருஷ்ணா பைபிளையும்
குரானையும் கொடுக்கிறார். அதையும் அந்த ஒரு மாத இடைவெளியில் படித்து தனது
வழக்குக்குத் தேவையான குறிப்புகளை எடுக்கிறார்.
அடுத்த
அமர்வில், கீதையிலிருந்தும், பைபிளிலிருந்தும், குரானிலிருந்தும், "நானே
உலகத்தைப் படைத்தேன், நானே உலகைக் காக்கிறேன், நானே அழிக்கிறேன்" என்று
பொருள்படும் வசனங்களை எடுத்து நீதிமன்றத்திலை ஆதாரமாகச் சமர்ப்பிக்கிறார். இது
அந்த வழக்கை வலுப்படுத்திக் கொண்டிருக்கையிலேயே மயங்கி கோமோவில் விழுகிறார்.
ஒரு
மாதம் சுயநினைவின்றி படுக்கையில் கிடக்கிறார். இடது புறம் முழுவதும் பக்கவாதத்தால்
பாதிக்கப்படுகிறது. மீடியா கடவுளால்தான் அவரைக் காப்பாற்ற முடியும் என்று செய்தி
வெளியிடுகிறது. காஞ்சிலால் இறந்துவிட்டதாக மருத்துவர்களால் அறிவிக்கப்படுகிறது.
அடுத்தநாள், காஞ்சிலால் கண்திறக்கிறார். எதிரில் கிருஷ்ணா இருக்கிறான். "நீ
ஒரு அற்புதத்தைப் பார்க்கிறாயா?" என்று சொல்லி தனது சாவிக்கொத்தை வைத்து உடல்
முழுவதும் தடவுகிறான் கிருஷ்ணா. அவரது பக்கவாதம் குணமாகிறது.
காஞ்சிலால்
குழம்பிக் கொண்டிருக்கையில், கிருஷ்ணா தானே பரந்தாமன் என்பதைக் காட்டுகிறான்.
கடவுள் உண்டு என்பதை நிரூபிக்கவே இப்படிச் செய்ததாகவும் சொல்கிறான். காஞ்சிலால்
உயிருடன் இருப்பது இன்னும் யாருக்கும் தெரியாது. வழக்கு காஞ்சிலாலுக்கு சாதகமாக
முடிகிறது. மத நிறுவனங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தைக் கொடுக்கின்றன. ஆனால்,
காஞ்சிலாலை தெய்வமாக வழிபட ஆரம்பிக்கின்றனர் மக்கள். அதை ஊக்குவிக்கின்றன லீலாதர்
சுவாமிகளின் அமைப்புகள். கிருஷ்ணா சரியான நேரத்தில் காஞ்சிலாலை அரங்கத்திற்குள்
கொண்டு வருகிறான். தனக்கு உருவாக்கப்பட்டிருந்த சிலைகளை உடைக்கிறார் காஞ்சிலால்.
மதப்பீடாதிபதிகளின் நயவஞ்சகத்தை மக்களுக்குத் தெளிவாக்குகிறார். மக்கள் அவர்களை
அடிக்கச் செல்கின்றனர். அவர்களைத் தடுத்து "அவர்களை அடிக்காதீர்கள். அவர்கள்
தவறானவர்கள், ஆகையால் எந்த கோயிலுக்கும், எந்த மடத்திற்கும் செல்லாதீர்கள். இதுவே
அவர்களுக்குக் கொடுக்கும் தண்டனை" என்று மக்களை அமைதிப்படுத்துகிறார்
காஞ்சிலால்.
எல்லா
காரியங்களும் வெற்றிகரமாக முடிந்ததும் கிருஷ்ணாவைத் தேடுகிறார் காஞ்சிலால், பேசிக்கொண்டிருக்கையில்
மறைகிறான் கிருஷ்ணா. அவன் விட்டுச் சென்ற சாவிக்கொத்தை எடுத்து
பத்திரப்படுத்துகிறார் காஞ்சிலால். கிருஷ்ணாவின் அசரீரி கேட்கிறது "அந்தச்
சாவிக்கொத்தைத் தூக்கிப்போடு, நீ சிலை வழிபாட்டை எதிர்த்துக் கொண்டிருப்பவன். நீயே
அதைச் செய்யாதே" என்று. காஞ்சிலால் அதைச் சிரித்துக் கொண்டே தூக்கிப்
போடுகிறார்.
இதுவே
படத்தின் கதை. இந்தக் கதை ஒரு குஜராத்தி நாடகத்தை தழுவி எடுக்கப்பட்டது. சிலர் இது
"The Man Who sued God" என்று ஆஸ்திரேலிய திரைப்படத்தைத் தழுவி இருப்பதாகச்
சொல்கின்றனர்.
இந்தப்
படம் முழுவது நம்மைச் சிந்திக்க வைக்கிறார் படத்தின் இயக்குனர் உமேஷ் சுக்லா.
நாத்திகனின்
பேச்சாக இருந்தாலும் காஞ்சிலால் பேச்சு அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாகவே
இருக்கிறது. கோயில்களையும் மடாலயங்களையும் கடவுளின் கடைகள் என்று சொல்கிறார்.
உண்மையும் அப்படியே இருக்கிறது. எந்தக் கோயிலுக்குச் சென்றாலும் சிறப்பு தரிசன
கட்டணம், பூஜை கட்டணம் என்று கோயில்களைக் கடைகளாகவே நடத்துகின்றனர். காஞ்சி லாலாக
நடித்திருக்கும் பரேஷ் ராவல் சிறப்பாக நடித்திருக்கிறார்.
அக்ஷய்
குமார் இந்தப் படத்தில் கிருஷ்ணனாக கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார். அவரே இப்படத்தையும்
தயாரித்திருக்கிறார். கடவுளில் செயல் பற்றிய இப்படத்தில் கடவுள் அதிகம்
செயல்படாமலேயே இருக்கிறார். ஆனால் காஞ்சிலாலை செயல்பட வைக்கிறார்.
லீலாதர்
சுவாமியாக மிதுன் சக்ரவர்த்தி நடித்திருக்கிறார். அவர் நமது நித்தியானந்தாவைப்
படம் முழுவதும் பிரதிபலிக்கிறார். அவரது காலடித் தடங்களைப் பதித்து அதை
ரூ.1,50,000/-க்கு விற்கிறார்.
சித்தேஸ்வர்
மகராஜாக நடித்திருக்கும் கோவிந்த் நம்தியோ மடாலயங்களைக் கடவுளரின் கடைகள் என்று
சொல்லும்போதெல்லாம் கோபப்பட்டு பேசி மாட்டிக் கொள்கிறார். உண்ணாவிரதம் இருக்கிறேன்
பேர்விழி என்று அவர் செய்யும் தில்லுமுல்லுகள் ரசிக்க வைக்கின்றன.
கடவுள்
பெயரைச் சொல்லி உழைக்கும் மக்களிடம் இருந்து சுரண்டும் ஈனர்கள் அனைவருக்கும்
இந்தப் படம் ஒரு சவுக்கடி. காப்புரிமை
குறித்த விழிப்புணர்வையும் இந்தப் படம் ஏற்படுத்துகிறது. இந்து மதத்தை இந்தப் படம்
இழிவு படுத்துவதாக ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். UAEல் இந்தப்
படம் தடை செய்யப்பட்டிருக்கிறது. என்னைப் பொருத்த வரை எந்த ஆன்மிகவாதியும் இந்தப்
படத்தை எதிர்க்க மாட்டான். சில லாஜிக்குகளைத் தவிர்த்துப் பார்த்தால், இந்தப் படம்
அற்புதமான படம். அனைவரும் பார்க்க வேண்டிய படம்.
No comments:
Post a Comment
நான் என் கருத்துகளைப் பதியவே (என் குரலைப் பதிவு செய்யவே) வலைப்பூப்பதிவுகளை இடுகிறேன்.
கண்ணியக்குறைவான மறுமொழிகளை வெளியிட இயலாது.
சில மறுமொழிகளுக்கு நான் பதிலளிக்கவில்லை என்றால், ஒன்று எனக்கு பதில் தெரியவில்லை அல்லது போராடிப் பயனில்லை (இந்தப் பழம் புளிக்கும்) என்ற எனது நிலையே.