Thursday 10 January 2013

என் வழி தனி வழி அல்ல புது வழி

இப்போது அரசாங்கத்திற்கு புது கடமையைத் தந்திருக்கிறார் கமல். இது வரை திருட்டு விசிடியைத் தேடிக் கண்டுபிடித்து தண்டிக்கக் காத்திருக்கும் அரசு, இனி யாராவது ஹோட்டல்களில், மால்களில், திருமண மண்டபங்களில், அல்லது ஏதாவது பொது இடங்களில் டிடிஎச் மூலம் படம் காண்பிக்கின்றார்களா என்பதை ஆராய்ந்து அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

சரி, இதெல்லாம் விஞ்ஞான வளர்ச்சியில் தடுக்கப்பட முடியாதது என்று வைத்துக் கொள்வோம்.


இது சம்பந்தமான பேட்டியில் கமல் சொல்கிறார், " இந்தப் படத்தை நாளை டிடிஎச்சில் வெளியிடும்போது கல்யாண மண்டபங்கள், உணவகங்கள், ஈசிஆர், ஓஎம்ஆர் பகுதிகளில் டிக்கெட் போட்டு காட்ட சிலர் திட்டமிட்டிருந்தனர். அவர்களெல்லாம் நாளை பணம் கட்டியவர்களுக்கு பதில் சொல்லியே தீர வேண்டும் அல்லவா.. அவர்களைச் சட்டம் பார்த்துக் கொள்ளும்." என்று.

அதுவெல்லாம் சரி நாளை படம் காட்டுகிறேன் என்று நீங்கள் சொன்னதால் வீட்டிலிருந்து படம் பார்க்க ரூ.1000 கொடுத்து புக் செய்து வைத்திருக்கிறார்களே அவர்களுக்கு நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள். அல்லது அந்த டி.டி.எச் நிறுவனங்கள்தான் என்ன பதில் சொல்லும்.

பேட்டியெல்லாம் ஆவசேமாகக் கொடுத்துவிட்டு, என் வழி தனி வழி அல்ல புது வழி என்கிறீர்களே, யாரை வம்புக்கு இழுக்கிறீர்கள்.

நான் யாருக்கும் பயப்படவில்லை, பயப்படவில்லை என்று சொல்லியே உங்கள் பயத்தையல்லவா உலகறியச் செய்துவிட்டீர்கள்.

தியேட்டர் காரர்களைப் பைத்தியக்காரனாக்கி, டிடிஎச் காரர்களைப் பைத்தியக்காரனாக்கி, ரசிகர்களைப் பைத்தியக்காரனாக்கி, கடைசியல் பொதுமக்கள் ஒவ்வொருவரையும் பைத்தியக்காரராக்குகிறீர்களே!

ஐயா! நீர் நல்லவரா? கெட்டவரா?

ஆனால் உங்களுக்காக ரசிகர்களைக் கெட்டவர்களாக ஆகச் சொல்கிறீர்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.

டி.டி.எச்ல் இருந்து யாராவது கேபிள் ஆப்பரேட்டர் காப்பி செய்து கேபிளில் விடுவார். கமல் ரசிகர்கள் அந்தக் கேபிள் ஆப்பரேட்டரைத் தேடித் தேடி அடிப்பார்கள். இதுதான் நடக்கப் போகிறது. கமல் நல்லவராகவே இருப்பார். ரசிகர்களைக் கெட்டவர்களாக்கிவிடுவார். தலை நரைத்த ரசிகர்களையும், பாலகனைப் போல் கோபங்கொண்டெழ வைக்கும் உங்கள் வீரவசனங்கள் தேவைதானா.

ரசிகர்களே "விஸ்வரூபம்" விழிப்புடன் இருங்கள். அதைவிட "கமல்" கண்களில் எண்ணெய் விட்டு விழிப்புடன் இருங்கள்.


No comments:

Post a Comment

நான் என் கருத்துகளைப் பதியவே (என் குரலைப் பதிவு செய்யவே) வலைப்பூப்பதிவுகளை இடுகிறேன்.

கண்ணியக்குறைவான மறுமொழிகளை வெளியிட இயலாது.

சில மறுமொழிகளுக்கு நான் பதிலளிக்கவில்லை என்றால், ஒன்று எனக்கு பதில் தெரியவில்லை அல்லது போராடிப் பயனில்லை (இந்தப் பழம் புளிக்கும்) என்ற எனது நிலையே.