Thursday 7 February 2013

கடல் - ஆர்ப்பரிக்குமா?

kadal-0601 நாஞ்சில் நாட்டு வட்டார மொழியைப் படம் முழுவதும் கொண்டிருக்கும் தமிழ்த் திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

விமர்சகர்கள் பெரும்பாலும் படம் சரியில்லை என்றே விமர்சனம் செய்திருந்தார்கள். இருந்தாலும் பார்ப்போம், ஜெயமோகன் எழுதியிருக்கிறாரே  என்று படத்தைப் பார்த்தேன். ஒரு பதிவு இதுகுறித்து எழுத வேண்டும் என்று தோன்றியது.

கௌதம் கார்த்திக்குக்கும், துளசி நாயருக்கும் அறிமுகப் படம் இது. இரு பெரும் நட்சத்திரங்களின் வாரிசுகள் ஒரு பெரிய இயக்குனரின் படத்தில் அறிமுகமாகியுள்ளனர்.

கிறிஸ்தவ வேத கல்லூரியில் படிக்கும் பெர்க்மென்ஸ் (அர்ஜூன்) மிகவும் கெட்டிக்காரர். ஒரு பாதிரியார் இவரைப் பார்த்து "ஏலே, பெர்க்மென்சு, என்னைவிட, உனக்குத்தாம்லே பைபிள் அதிகம் தெரியும்." என்று சொல்லுமளவுக்குக் கெட்டிக்காரார்.

ஆனால், பைபிளை சாத்தான்தான் அதிகம் தெரிந்து வைத்திருக்கும் என்பது போல, பெர்க்மென்ஸ் பெரிய விஷமக்காரரும் கூட. அவர் ஒரு நாள் ஒழுக்கக்கேடாக நடந்துகொண்டதை தனது சக மாணவரான சாம் ஃபெர்ணாண்டோ (அரவிந்தசாமி) மேலிடத்திற்குக் காட்டிக் கொடுக்கிறார். இதனால் சாம் மீது வஞ்சங்கொள்கிறார் பெர்க்மென்ஸ்.  இந்த வஞ்சமே படம் நெடுக வருகிறது.

சாம் தனது கல்லூரிப் படிப்பை முடித்து ஒரு மீனவ கிராமத்திலுள்ள ஒரு கோவிலுக்கு பாதிரியாராகப் போகிறார். அங்கு தாசி மகனாக, சமூகத்தின் கொடுமைகளில் சிக்குண்டு மிருகமாகத் திரியும் தாமஸ்-ஐ (கௌதம் கார்த்திக்) நல்வழிப்படுத்தி, மீன் பிடி தொழிலில் இறக்கிவிடுகிறார்.

தாமஸ் பேருந்திலும், படகோட்டியாகத் திரியும் வேளையிலும் என அடிக்கடி தற்செயலாக பியாவைச் (துளசி நாயர்) சந்திக்கிறான். காதலிக்கிறான். 

ஆபத்தில் சிக்குண்டிருக்கும் பெர்க்மென்சை, சாம் காப்பாற்றுகிறார். பெண்களின் உதவி கொண்டு பெர்க்மென்சுக்கு சிகிச்சை செய்கிறார் சாம். இதை செட்டியாக வரும் பொன்வண்ணன் கவனித்துவிட்டு, சாமுக்கும் அந்தப் பெண்களுக்கும் தொடர்பிருப்பதாக நினைத்து ஊரைக்கூட்டி வந்து அடிக்கிறார்.
விசாரிக்கும்போது அதில் ஒரு பெண், தனக்கும் சாமுக்கும் தொடர்பிருப்பதாகச் சொல்கிறாள். அதைக்கண்டு சாமைத் தாக்க வரும் ஒருவன் தவறுதலாகக் கீழே விழுந்து இறக்கிறான். சாம் சிறைச்சாலை செல்கிறார். பெர்க்மென் தாமசை தன் வழியில் இழுத்து மிருகமாக்குகிறான். விடுதலையாகும் சாம் தாமசை தன் பக்கம் அழைக்கிறார்.

வென்றது யார்? பெர்க்மென்சா? சாமா? என்பதே கதை.

கடலுக்குள் நடக்கும் சண்டைக் காட்சிகள் நன்றாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன. ஹாலிவுட் திரைப்படங்களில் மட்டுமே கண்டிருக்கும் கடலின் உண்மை முகத்தைத் தமிழில் முதன் முதலாகக் காட்டுகின்றனர். நடுக்கடலில் மலையென எழும்பும் அலைகளை “பொன்னியின் செல்வனில்” படித்தது போல் காணொளியாகக் கண்டதில்லை. இந்தப் படத்தைக் கண்டால் அந்த அலைகளின் பிரம்மாண்டத்தை உணர முடியும்.

“நான் சாத்தானுக்க ஆளு லே”, “நீ இயேசுவக்க ஆளு”, “சாத்தான், இயேசுவக்க அண்ணன். அப்ப யாரு பெரியவரு?”, “பேய் ஓட்ட பத்து ரூபா” போன்ற வசனங்களும், வேசியை இடுகாட்டில் அடக்கம் செய்ய மறுக்கும் காட்சியும் கிறிஸ்தவ மக்களைப் போராட்டத்திற்குத் தூண்டியிருக்கின்றன. இறுதியில் படம் சொல்லும் நீதியை மனதில் கொண்டு, இந்தக் குற்றச்சாட்டுகளைப் புறந்தள்ளலாம். மற்ற மதத்தவரும் இந்தப் படத்தை அந்நியமாகப் பார்க்கமாட்டார்கள். இது நமது மண் சம்பந்தப்பட்ட கதையே. நமது மீனவ கிராமத்துக் கதையே.

அர்ஜூன் நன்றாக நடித்திருக்கிறார். இருந்தாலும், அவரை அப்படிப்பட்ட கெட்ட பாத்திரத்தில் ஏற்பது சிரமமாகத்தான் இருக்கிறது. இறுதிச் சண்டைக் காட்சியில் கலக்கியிருக்கிறார் அர்ஜூன். அரவிந்தசாமி “சாம்” பாத்திரத்திற்கு அற்புதமான தேர்வு. தான் ஏற்ற பாத்திரத்திற்கு நீதி செய்திருக்கிறார். கௌதம் கார்த்திக் அறிமுகப்படம் என்றாலும், அவரது தந்தை நடிப்பின் சாயல் அங்கங்கு பளிச்சிடுகிறது. தாயை நினைத்து கதறும் காட்சியிலும், பிரசவக் காட்சியிலும் “சபாஷ்” வாங்குகிறார். சிறு வயது தாமசாக வரும் சிறுவனும் அற்புதமாக நடித்திருக்கிறான்.

பியாவை, பாதிரியார் சாமிடம் தாமஸ் அறிமுகப்படுத்தும் காட்சியில், தாமசின் பழைய பதிவு செய்யப்பட்ட ஒலிப்பதிவைப் பாதிரியார் பியாவிடம் போட்டுக்காட்டும்போது நம்மை அறியாமல் கண்களில் நீர் கசிகிறது. 

பியாவைக் கொல்ல நடுக்கடலுக்கு இட்டுச் சென்று, கொல்ல எத்தனிக்கும்போது, “ஏலே, பெர்க்மென்ஸ், ஏம்லே நடுங்குத, தடுமாறுத” என்று தன்னைத் தானே கேட்டுக் கொள்ளும் பெர்க்மென்சைப் பார்க்கும்போது, எல்லா மிருகங்களுக்குள்ளும் கடவுள் இருக்கிறார் என்பது நிரூபணமாகிறது.

ஜெயமோகனின் கதையில் ஒரு குழப்பமும் இல்லை. சரியாகவே இருக்கிறது. அற்புதமான காவியமாக வரவேண்டிய இத்திரைப்படம் திரைக்கதையால் லேசாகத் தடுமாறுகிறது.  திரைக்கதையில் ஜெயமோகனும் மணிரத்தினமும் சேர்ந்து பணி செய்திருக்கின்றனர். அதில்தான் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. இதே கதையை பாலா இயக்கியிருந்தால் வேறு மாதிரியாக ராவாக இருந்திருக்கும். மணி என்பதால் சில சினிமாத்தனங்களுக்குள் சிக்கி திரைக்கதையில் சிறிது சறுக்கிவிட்டார்.

இந்தப் படத்தின் கதாமாந்தர்களாக வரும் அனைத்து நட்சத்திரங்களும் சிறப்பாக நடித்திருக்கின்றனர். அதில் மணியின் உழைப்பு தெரிகிறது. ஒவ்வொரு காட்சியிலும் ராஜீவ் மேனனின் ஒளிப்பதிவு நம்மைக் கவர்கிறது. இசை மற்றும் பின்னணி இசை எதிர்பார்த்த அளவு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏ.ஆர். ஹாலிவுட்டிற்கே சென்றுவிடலாம்.

என்னைப் பொறுத்தவரை ஒரு சில காட்சிக் கோர்வை மற்றும் திரைக்கதைத்தொகுப்பு ஆகியவற்றில் இருக்கும் குறைகளைக் களைந்து பார்த்தால் ஆர்ப்பரித்திருக்க வேண்டியதுதான் “கடல்”. ஏனோ மக்களுக்கு அமைதியான ஏரியாகப் படுகிறது போலும்.

இரண்டரை மணிநேரமும் சிந்திக்க வைத்த படம் “கடல்”. 

ஜெயமோகனின் நாவலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

6 comments:

  1. //ஜெயமோகனின் கதையில் ஒரு குழப்பமும் இல்லை. சரியாகவே இருக்கிறது.//

    திரைக்கதையை விடுங்க, கதையின் முக்கிய கரு என்ன?
    ஒரு வரியில் சொல்லுங்க எனக்கு புரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்கணும், நீங்கள் கொடுத்திருந்த இந்த முதல் மறுமொழியை கவனிக்கவில்லை.

      இரண்டாவது மறுமொழிக்கு நான் கொடுத்திருக்கும் ரிப்ளையில் கடைசி வரியே நீங்கள் கேட்ட "ஒருவரி கரு".

      வந்து கருத்திட்டமைக்கு நன்றி!

      Delete
  2. மணிரத்தினத்தின் படத்தை வருசையாக கவனித்து பாருங்கள், தளபதி, ராவணன், புராண கதையை தற்கால சூழலில் எடுக்க முற்படுவது தெரியும், அப்படியே கடலும், பைபிள் சம்பவத்தை தற்கால சூழலில் எடுக்க முற்பட்டு, அதை சரியாக (தெரியாமல்) செய்யாமல் தோற்று விட்டார், கொஞ்சம் ஆர அமர இன்னும் தெரிந்து கொண்டு களத்தில் இறங்கி இருந்தால் வெற்றி பெற்று இருப்பார். இருந்தாலும் சில காட்சிகள், சில வசனங்கள் தவிர்த்து பார்த்தால் எதோ சொல்ல வருவது தெரிகிறது, ஆனால் புரியவில்லை

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மற்ற படங்களில், தளபதியில் வென்றாலும், ராவணனில் தோற்றே போனார். பெரும்பான்மை மக்கள் அந்த உருவகத்தை ஏற்கவில்லை.

      ராவணன் படத்தில் இந்து மதத்தைத் தழுவி எடுத்து, இந்து மதத்தையும், நம்பிக்கைகளையும் அடித்தே இருப்பார். தளபதியில் அதிகம் அடித்திருக்க மாட்டார் கிள்ளி விட்டிருப்பார். அது மக்களுக்குப் புரியவில்லை. அதனால் தப்பித்தார்.

      ஆனால் "கடல்" அப்படியல்ல. கடல் சிறுபான்மை மதத்தினரின் கதை என்பதால், கிறிஸ்தவத்தையும் அதன் எந்த நம்பிக்கையையும் அவர் அடிக்க வில்லை. அடிப்பது போல ஜெயமோகன் சிறு சாடை காட்டியிருந்தாலும் அதை நீக்கியிருப்பார்.

      இயேசு ஜெயிப்பார், சாத்தான் தோற்பான் என்றே சொல்லியிருக்கிறார். நீங்கள் குறிப்பிடும் மற்ற படங்களில் எல்லாம் சாத்தான்களின் கைப்பாவையாக இருந்தவர்களே ஹீரோ,கடவுளின் பக்கம் இருந்தவனாக உருவகப்படும் பாத்திரம் கொடும் வில்லனாகச் சித்தரிக்கப் படுவான். ஆனால், இந்தப் படத்தில் இயேசுவின் பிள்ளையாக இருப்பவர்களே ஹீரோக்கள். இயேசுவின் மேல் நம்பிக்கையில்லாதவன் வில்லன். சரிதானே!

      மேலும், இந்தப் படத்தில், இயேசுவே (சத்தியமே) ஜெயிப்பார். சாத்தான் (பொய்மையும், அநீதியும், கபட நாடகங்களும்) தோற்பான் என்று சொல்லியிருக்கிறார்.

      கடைசியாக பெர்க்மென்ஸ் பேசும் வசனம், "பியா சாகல, பெர்க்மென்ஸ் தோத்துட்டான்."

      ஆக, "சத்தியமேவ ஜெயதே" தான் சொல்லியிருக்கிறார்.

      Delete
  3. http://enewstamil.blogspot.in/2013/02/blog-post_4551.html

    ReplyDelete
    Replies
    1. //சில வசனங்களில் கிறிஸ்தவத்தை சரியாக விளங்கி கொள்ளாத ஜெய மோகனும், மணி ரத்தினமும், சேர்ந்து தேவை இல்லாததை உளறி கொட்ட வைத்துள்ளனர், ஆனாலும் கிறிஸ்துவும், கிறிஸ்தவர்களும் மன்னிக்க தெரிந்தவர்களாயிற்றே,// என்று உங்கள் மேற்குறிப்பிட்ட பதிவில் சொல்லியிருக்கிறீர்கள்.

      உண்மையான கிறிஸ்தவர்களும், கிறிஸ்துவும் அவர்களைப் பாராட்டுவார்கள் என்றே நான் நினைக்கிறேன். மன்னிப்பு அவர்களுக்குத் தேவைப்படாது. அதுசரி! அவர்களா விளங்கிக் கொள்ளாமல் உளறிக் கொட்டியிருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்?

      Delete

நான் என் கருத்துகளைப் பதியவே (என் குரலைப் பதிவு செய்யவே) வலைப்பூப்பதிவுகளை இடுகிறேன்.

கண்ணியக்குறைவான மறுமொழிகளை வெளியிட இயலாது.

சில மறுமொழிகளுக்கு நான் பதிலளிக்கவில்லை என்றால், ஒன்று எனக்கு பதில் தெரியவில்லை அல்லது போராடிப் பயனில்லை (இந்தப் பழம் புளிக்கும்) என்ற எனது நிலையே.