Tuesday, 11 September 2012

நெஞ்சம் மறப்பதில்லை


இன்று காலை வேலைக்குக் கிளம்பும் முன் தொலைக்காட்சியில் "நெஞ்சம் மறப்பதில்லை" பாடல் ஒலித்தது. அவசரமாகக் கிளம்பிக் கொண்டிருந்த நான் சற்று நிதானித்து நின்றேன். கண்கள் தொலைக்காட்சியைத் தேட ஆரம்பித்துவிட்டன. காலை முதல் இந்தப் பதிவை எழுதும்வரை அந்தப்பாடலே என் மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது.

ஆகா.. என்ன அற்புதமான பாடல்… எம்.எஸ்.வி. கலக்கியிருந்தார். எத்தனை முறை இந்தப் பாடலைக் கேட்டிருப்பேன்… யோசிக்கிறேன்… ஒரு ஆயிரம் முறை… இல்லை இல்லை அதற்கும் மேலேதான் இருக்கும். இன்றுகூட நகரவிடாமல் நிற்க வைத்துவிட்டதே. காலாகாலத்துக்கும், இன்னும் காலத்தைக் கடந்தும் நிற்கும் பாடல். அதில் மாற்றுக் கருத்தில்லை. 

இசையில் மயங்கி நின்று காணொளிகயைக் கண்டபோது, எத்தனை கோணங்களில் இந்தப் பாடல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று கவனித்தேன். அப்பப்பா… எத்தனை கோணங்கள். ஸ்ரீதர் மனக்கண் முன் ஓடினார். இப்படிப்பட்ட ஒரு படைப்பாளியை எப்படி அங்கீகரித்திருக்கிறோம் நாம். இன்றைய தலைமுறையினர் பல பேருக்கு ஸ்ரீதர் என்றால் யார் என்றே தெரியாதே.

அந்தப் பாடலின் ஆரம்பத்திலேயே கதாநாயகன் யோசிப்பதாக முகத்தை கிளோசப்பில் காட்டி, அப்படியே போன ஜென்மத்துக்கு காட்சி கரைந்து போகும்படிச் செய்திருப்பார். மலைமேல் தேவிகா நின்று கொண்டு ஹம்மிங் செய்து கொண்டிருப்பார். அப்படியே காட்சி மாறும். பாதையில் கல்யாண்குமார் ஓடி வந்து கொண்டிருப்பார். பல காட்சிகள் கேமராவை கீழே வைத்தே எடுத்திருப்பார். ஒரு காட்சியில் இரு பாறைகளுக்கு நடுவே தேவிகா நின்று கொண்டிருப்பார். இடது புறத்தில் கதாநாயகன் தேவிகாவைப் பார்த்துப் பாடிக்கொண்டிருப்பார். பாடல் வரிகளுக்கேற்ப தேவிகாவின் நடை உடை இருக்கும். அந்த ஒரு பாடலைப் பார்த்ததே முழு படத்தையும் பார்த்ததைப் போன்ற உணர்வைத் தந்தது.

அமரத்துவம் வாய்ந்த பாடல். இந்தப் பாடலை இன்றைய தலைமுறையினரும் பார்க்க வேண்டும். தொழில்நுட்பம் வளராத காலத்திலேயே ஸ்ரீதர் எப்படிப்பட்ட புதுமைகளையெல்லாம் செய்திருக்கிறார் என்பதைப் பார்க்க வேண்டும். 

இந்தப் படத்தைத் தயாரித்த திரு.காசி இதுபற்றி கூறுகையில், 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தை எடுத்து முடிக்க ஸ்ரீதர் மிகவும் உதவினார். அவர் செய்த உதவிகளை மறக்க முடியாது. 'நெஞ்சம் மறப்பதில்லை' தரமான படம் என்று பெயர் பெற்றது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை என்று கூறினார்.

இப்பேர்ப்பட்ட ஒரு தரமான படம்  எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை என்றால் அது யாருடைய குற்றம்.

இன்றைய இயக்குனர்களைச் சற்று சிந்தித்துப்பாருங்கள். இரண்டுபடம் வெற்றி பெற்றுவிட்டால் "எனக்கெல்லாம் ஹாலிவுட்தான் சரி, இங்கிருப்பவர்கள் எல்லாம் கலைக்குருடர்கள்" என்பதுபோல் வானத்தைப் பார்த்துத்தான் பேசுவார்கள்.

ஒன்றுமில்லை. முகமூடி இயக்குனர் மிஷ்கினை எடுத்துக் கொள்ளுங்கள், மூன்று படம் ஹிட், அவர் இயக்கிய படங்கள் பெரும்பாலானவை வெளிநாடுகளில் இருந்து காப்பி அடிக்கப்பட்டவை. தொலைக்காட்சிகளில் முகமூடி படத்தின் பிரமோவில் "நானே 2, 3 படம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு எடுத்திருக்கேன்'' என்கிறார். இவர்களைப் போன்றோரைப் பார்த்துவிட்டு ஸ்ரீதர் போன்றோரைச் சிந்தித்துப் பார்த்தால் மலையாகக் கண்ணை மறைக்கிறார் ஸ்ரீதர். அதில் மிஷ்கின் போன்றோர் மடுக்களாக மறைந்தே போகின்றனர்.

ஸ்ரீதரை என்றும் நெஞ்சம் மறப்பதில்லை. 

No comments:

Post a Comment

நான் என் கருத்துகளைப் பதியவே (என் குரலைப் பதிவு செய்யவே) வலைப்பூப்பதிவுகளை இடுகிறேன்.

கண்ணியக்குறைவான மறுமொழிகளை வெளியிட இயலாது.

சில மறுமொழிகளுக்கு நான் பதிலளிக்கவில்லை என்றால், ஒன்று எனக்கு பதில் தெரியவில்லை அல்லது போராடிப் பயனில்லை (இந்தப் பழம் புளிக்கும்) என்ற எனது நிலையே.