Monday 3 September 2012

சகுனிபாதி காமெடி, பாதி அரசியல் அதுதான் சகுனி.

கமலக்கண்ணன் (கார்த்தி) காரைக்குடியில் ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்தவன். பெரிய அன்னச்சத்திரமாக விளங்குகிறது அவனது வீடு. அரசாங்கம் அவன் வசிக்கும் பகுதிக்கருகே ஒரு இரயில்வே சுரங்கப்பாதை திட்டத்தைக் கொண்டு வருகிறது. ரியல் எஸ்டேட் காரர்கள் தந்திரத்தால் அந்த திட்டம் நகர்ந்து அவனது வீடு அந்தப்பாதையில் அடிபடுகிறது.

தனது வீட்டைக் காக்க கமலக்கண்ணன் சென்னையில் இருக்கும் அரசியல்வாதி பூபதியைச் (பிரகாஷ் ராஜ்) சந்திக்க செல்கிறான். அங்கே அவன் அவமதிக்கப்படுகிறான். அந்தத் திட்டத்தை மாற்றியதே பூபதிதான் என்பதை அறிகிறான்.


சென்னையில் இருக்கும் தன் அத்தை (ரோஜா) வீட்டில் தங்கியிருக்கிறான். தனது அத்தை மகள் ஸ்ரீ தேவியைக் (பிரனிதா) காதலிக்கிறான். காதல் அத்தைக்குத் தெரிய வரும்போது அவளும் அவனை அவமதிக்கிறாள். கமலக்கண்ணன் நடுத்தெருவில் நிற்கிறான். ஆட்டோக்கார ரஜினி அப்பாதுரை (சந்தானம்) நட்பு கிடைக்கிறது.

கமலக்கண்ணன் எப்படி ஒவ்வொரு காயாக நகர்த்தி அரசியல்வாதி பூபதியின் கொட்டத்தை அடக்கி தனது வீட்டை காப்பாற்றுகிறான் என்பதே மீதிக் கதை.

இந்தக் கதையைச் சொல்லி இயக்குனர் சங்கர் தயாள் என்ன சொல்ல வருகிறார். கதையின் நோக்கம் என்ன?
1. சில இடங்களில் தமிழன் அப்படி, தமிழன் இப்படி என்று சொல்கிறார். ஒரு பாடல் கூட இதைப்பற்றி ஒலிப்பதாக நினைவு (முதல் பாடல் என்று நினைக்கிறேன்). ஆனால் சந்தானத்தின் காமெடி சீன்கள் ஒன்றில் "ஏன் கமல், நீங்களே சொல்லுங்க, ரஜினி நல்லா இருக்கா? அப்பா துரை நல்லா இருக்கா?" என்று கேட்க வைக்கிறார். இதுதான் தமிழை உயர்த்திப் பிடிப்பதா?

2. ஒரு காட்சியில் கார்த்தி தன்னை ஒரு தெலுங்கு பெண் காதலித்ததாக சந்தானத்திடம் சொல்வார். நமக்கும் அதுபோல்தான் தெரியும். கடைசியில் அவள் இன்னொருவனின் மனைவி என்று காட்டுவது மிகக் கொச்சையாக இருக்கிறது. இதைக் காமெடி என்று வேறு நம்மை ஏற்க வைக்கிறார் இயக்குனர்.

2. பூபதி (பிரகாஷ்ராஜ்) பல இடங்களில் கலைஞராகத் தெரிகிறார். மேம்பாலம் கட்டுதல், அரசியலில் வியாபாரம். ஒரு காட்சியில் "our chief minister is for our people" என்று ஒருவர் சொல்வார். அதற்கு பூபதி "no iam for my family" என்பார்.

3. பெருமாள் (கோட்டா சீனிவாச ராவ்) வைகோவைப் போல் தெரிகிறார். அரசியல்வாதி பெருமாளைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் வைகோவிற்குப் பொருந்தும் வண்ணம் உள்ளன. கருப்பு டவல், தெலுங்கு வாடை, இவர் கோபால்சாமி, அவர் பெருமாள். கட்சிக்காரர்கள் சீட் கேட்பதும், அவர்களை இவர் கட்சியை விட்டு வெளியேற்றுவதும். இப்படி பல பொருத்தங்கள்.

ஆக மொத்தத்தில் வைகோ நல்லவர், ஆனால் விபரம் அறியாதவர், அவருக்கு சில தந்திரங்களைக் கற்றுக் கொடுத்தால் நாளைய முதலமைச்சராக வருவார் என்று சொல்கிறார் போல இயக்குனர்.

சரி படத்தின் அரசியல் போகட்டும். இரயில்வே சுரங்கப்பாதையை வேறு இடத்திற்கு மாற்ற தமிழக அரசியல்வாதியிடம் ஏன் ஹீரோ போகிறார்? மத்திய அமைச்சர்களிடம் போக வேண்டாமா? அல்லது அதுதான் உண்மையான வழிமுறையா? எனக்குத் தெரியவில்லை.

சகுனி படத்தில் யாருடைய நடிப்பு நன்றாக இருந்தது என்பதைக் கண்ணை மூடிக் கொண்டு தியானித்தால் நாசரே வந்து நிற்கிறார். ஒரு சிறிய பாத்திரம்தான், ஆனால் அதையும் எவ்வளவு அழகாக மெருகூட்டியிருக்கிறார். நெல்லி சாமியாக வரும் நாசர் ஜக்கி வாசுதேவை பிரதிபலிப்பதாக ஊகிக்கிறேன்.

அடுத்தது யார்? என்று பார்த்தால் ராதிகா சரத்குமார். ரமணி ஆச்சியாக அழகாக நடித்திருக்கிறார். அறிமுகமாகும்போதே புகழும் கமலக்கண்ணனை சந்தேகத்தோடும் அதே நேரத்தில் நம்பிக்கையோடும் பார்க்கும் காட்சியில் அவரது முக மாற்றங்கள் பிரமாதம்.

எப்போதும் சின்ன பாத்திரத்தைக்கூட அசுரத்தனமாக மாற்றிவிடக்கூடிய பிரகாஷ்ராஜ் இந்தப் படத்தில் மிஸ்ஸிங். இவர் நடிக்க வேண்டிய பாத்திரத்தில் ஏற்கனவே ஒப்பந்தமாகியிருந்தவர் சலீம் கௌஸ் (அதாங்க வேட்டைக்காரன் வில்லன்). இந்த பூபதி பாத்திரத்திற்கு அவரே பொருத்தமானவர் என்றே நினைக்கிறேன். அவர் நடித்திருந்தால் வில்லத்தனத்தைக் கூட்டிக் காட்டியிருக்கும்.

அதேபோல் வசுந்திரா தேவியாக நடித்திருக்கும் கிரண், அவ்வளவு பிரகாசிக்கவிலை. அந்தப் பாத்திரத்தில் ஏற்கனவே ஒப்பந்தமாயிருந்த மும்தாஜே கனக்கச்சிதமாகப் பொருந்தியிருப்பார்.

சந்தானம் காமெடி சுமார். ஹீரோ, ஹீரோயினுக்கு நடிக்க வாய்ப்பு குறைவு. அதனால் அவர்களைச் சொல்லி ஒன்றும் குற்றமில்லை.

படம் ஒரு வருடத்திற்கு முன் வந்திருந்தால் வேறு ரிசல்ட் கிடைத்திருக்கும். தற்போதைய அரசியல் சூழலில் படம் சப்பென்று இருக்கிறது.

No comments:

Post a Comment

நான் என் கருத்துகளைப் பதியவே (என் குரலைப் பதிவு செய்யவே) வலைப்பூப்பதிவுகளை இடுகிறேன்.

கண்ணியக்குறைவான மறுமொழிகளை வெளியிட இயலாது.

சில மறுமொழிகளுக்கு நான் பதிலளிக்கவில்லை என்றால், ஒன்று எனக்கு பதில் தெரியவில்லை அல்லது போராடிப் பயனில்லை (இந்தப் பழம் புளிக்கும்) என்ற எனது நிலையே.