Wednesday 12 September 2012

அழகே வா... அருகே வா... | ஆண்டவன் கட்டளைஇன்று காலை நான் கேட்ட பழைய பாடல், ஆண்டவன் கட்டளை படத்திலிருந்து அழகே வா… அருகே வா….

அருமையான பாடல். காமம்தான் இருந்தாலும், கதையின் தேவைக்காக இந்தப் பாடல் அற்புதமாகப் பொருந்தியிருக்கும். தேவிகாவின் முகபாவனைகளே காம அழைப்பு விடுக்கும். கண்ணதாசனின் வரிகள் அவ்வளவு அற்புதம், இசைக்குப் பொருந்தும்படியான வார்த்தைகள்.

கொஞ்சம் கதையையும் பார்ப்போமே, அப்போதுதான் இந்தப் பாடலின் அவசியம் புரியும். 

கல்லூரிப் பேராசிரியர் கிருஷ்ணன் (சிவாஜி) பிரம்மச்சாரியாக வாழ்கிறார். அவர் மிகவும் நேர்மையானவர், திறமையானவர். நன்றாகப் படிக்கும் ஒரு ஏழை மாணவன் (ஏ.வி.எம்.ராஜன்) கட்டணம் கட்ட மிகச் சிரமப்படும் வேளையில் தன் செலவில் அவனைப் படிக்க வைக்கிறார். அவ்வளவு நல்ல மனிதர் அவர். என்ன, காதலை மட்டும் வெறுக்கிறார் அவ்வளவுதான். தன்னிடம் பயிலும் மாணவர்கள் காதல்வசப்பட்டு ஊர்சுற்றும்போது அதைக் கண்டிக்கிறார்.

அவர் அப்படியே தொடர்ந்திருந்தால் கதையே இல்லையே. அவரும் காதல்வசப்படுகிறார். அதுவும் தன்னைவிட வயதில் மிகவும் சிறியவளான தனது மாணவி ராதாவிடம். தானாக அல்ல அந்த மாணவியின் (தேவிகா) தூண்டுதலால் (பாடல் வரிகளைக் கவனியுங்கள் எப்படி இலைமறை காயாக இருக்கிறது: ஒரு மொழியறியாத பறவைகளும், இன்ப வழியறியும், இந்த உறவறியும், இரு விழியிருந்தும் நல்ல மொழியிருந்தும், இங்கு வழியிருந்தும், ஏன் மயங்குகிறாய்). 

சரி காதல்வசப்பட்டாகிவிட்டது. ஊர் சுற்ற வேண்டாமா? இவரும் ஊர் சுற்றுகிறார். அப்படி ஊர்சுற்றும்போது, ஒரு ஏரியில் படகோட்டிக்கொண்டு, பாட்டுப்பாடிக் கொண்டு (அமைதியான நதியினிலே ஓடும்) போகையில் நீர்ச்சுழலில் அகப்பட்டு தேவிகா காணாமல் போகிறார்.

மாணவி இறந்துவிட்டதாகக் கருதப்பட்டதால், பேராசிரியர் கொலைக்குற்றம் செய்தவராகக் குற்றம்சாட்டப்படுகிறார். தண்டிக்கப்படுகிறார். விடுதலையாகிறார். மக்களுக்கு அவர்மேல் இருந்த மதிப்பு மரியாதை எல்லாம் காணாமல் போகிறது. ஊர் ஊராகப் பரதேசியாகச் சுற்றுகிறார் பேராசிரியர் (அப்போதுதான் ஆறு மனமே ஆறு பாடல்). கடைசியில் தேவிகா வருகிறார். இவர் குற்றமற்றவராகிறார். படம் சுபமாக முடிகிறது.

படம் தொய்வேயில்லாமல் வேகமாக நகரும் வண்ணம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப்படத்தில் வரும் அனைத்துப் பாடல்களுமே ஹிட். 1. கண்ணிரண்டும் மின்ன மின்ன (ஏவிஎம் ராஜன்) 2. சிரிப்பு வருது (சந்திரபாபு) 3. அழகே வா 4. ஆறுமனமே ஆறு. (கண்ணதாசனின் கற்கண்டு வரிகள் பாடல்கள் முழுவதும் நிறைந்திருக்கும்)

இதில் அழகே வா... அருகே வா... மிகவும் ஈர்க்கும் வண்ணம் இருக்கும். பாடல் வரிகள் (கண்ணதாசன்), இசை (எம்.எஸ்.விஸ்வநாதன்), இயக்கம் (கே.சங்கர்), காமம் (தேவிகா), நடிப்பு (சிவாஜி) ஆக மொத்தம் அத்தனையும் அருமை. தேவிகாவும் அருமையாக நடித்திருப்பார் (சற்று கூட நடித்திருந்தாலும் ஆபாசமாகத் தெரிந்திருக்கும். அளவாக நடித்ததால் அருமையாக இருக்கிறது). இவ்வளவு சொல்லிவிட்டு பி.சுசீலாவை மறக்கலாமா? என்ன அற்புதமான குரல், இந்த இனிமையை இனி எந்த பாடகியிடம் எதிர்பார்க்க முடியும்.

பாடல் வரிகள்
அழகே வா அருகே வா
அலையே வா தலைவா வா
அழகே வாவா… வா… அழகே வா (2)

ஆலய கலசம் ஆதவனாலே
மின்னுதல் போலே மின்னுது இங்கே  (2) (அழகே)

ஒரு கேள்வியை உன்னிடம் கேட்டுவிட்டேன் - நான்
கேட்டதை எங்கே போட்டுவிட்டாய்
என்ன தேடுகின்றாய் எங்கே ஓடுகின்றாய்
உந்தன் தேவைகளை ஏன் மூடுகின்றாய்
உந்தன் தேவைகளை ஏன் மூடுகின்றாய் (அழகே)

இன்ப ஆற்றினில் ஓடம் ஓடி வரும் - அந்த
ஓடத்தில் உலகம் கூடிவரும்
நம் முன்னவர்கள் வெறும் முனிவரில்லை
அவர் தனித்திருந்தால் நாம் பிறப்பதில்லை
அவர் தனித்திருந்தால் நாம் பிறப்பதில்லை (அழகே)

ஒரு மொழியறியாத பறவைகளும் – இன்ப
வழியறியும் இந்த உறவறியும்
இரு விழியிருந்தும் நல்ல மொழியிருந்தும்
இங்கு வழியிருந்தும் ஏன் மயங்குகிறாய்
இங்கு வழியிருந்தும் ஏன் மயங்குகிறாய் (அழகே)

      இந்தப் பாடல் கண்டிப்பாக கதையின் ஓட்டத்திற்குத் தேவை. அதை அளவோடு தந்திருப்பார்கள். அதுவும் தேவிகா பெரிதாக கவர்ச்சியெல்லாம் காட்டாமல் கண்களிலேயே உணர்ச்சிகளைக் கொணர்ந்திருப்பார். சிவாஜியின் நடிப்பும் இந்தப் பாடலில் அருமையாக இருக்கும். காம அழைப்பு வருகிறது, அதை ஏற்கவும் முடியவில்லை, மறுக்கவும் முடியவில்லை அதை எப்படி பிரதிபலிப்பது. சிவாஜியைப் பாருங்கள். இன்றைய நடிகர்கள் யாரும் (கமல் உட்பட) இதற்கீடான நடிப்பைக் கொடுக்கவே முடியாது. 

      இந்தக் கதையை இன்றைய தலைமுறை இயக்குனர்கள் படமாக்கியிருந்தால் வக்கிரமாகத்தான் படமாக்கியிருப்பார்கள் (கௌதம் மேனனின் "நடுநிசி நாய்கள்" சிம்புவின் "மன்மதன்" ரேஞ்சில்தான் இருக்கும்). அதில் இயக்கனர் கே.சங்கர் பாராட்டப்பட வேண்டியவர்.

      இப்படிப்பட்ட ஒரு கதை சமுதாயத்திற்குச் சொல்ல வேண்டுமா என்றால் கண்டிப்பாகச் சொல்ல வேண்டும். எவ்வளவு நல்லவனாகவும், திறமைசாலியாகவும் இருந்தாலும் சர்ந்தர்ப்பமும் சூழ்நிலையும் ஒரு மனிதனை எந்த அளவுக்குக் கூட்டிச் செல்லும் என்பதையும். அப்படிப்பட்ட மனிதர்களை நாம் சந்திக்கும்போது அவர்களை நாம் எப்படிப் பார்க்க வேண்டும் என்பதையும் இந்தப் படம் நமக்குக் கற்றுக் கொடுக்கிறது.

இந்தப் பாடலை யூடியூபில் காண இங்கே கிளிக் செய்யுங்கள்

No comments:

Post a Comment

நான் என் கருத்துகளைப் பதியவே (என் குரலைப் பதிவு செய்யவே) வலைப்பூப்பதிவுகளை இடுகிறேன்.

கண்ணியக்குறைவான மறுமொழிகளை வெளியிட இயலாது.

சில மறுமொழிகளுக்கு நான் பதிலளிக்கவில்லை என்றால், ஒன்று எனக்கு பதில் தெரியவில்லை அல்லது போராடிப் பயனில்லை (இந்தப் பழம் புளிக்கும்) என்ற எனது நிலையே.