முகநூலில்
எனது நண்பர் ஒருவர் இந்தக் கவிதையை ஷேர் செய்திருந்தார். அவர் கமலின் தீவிர விசிறி.
நானும் கூடத்தான். இருந்தாலும் தீவிரமெல்லாம் கிடையாது. நல்ல படம் என்றால் ரசிப்பேன். என்னை (என் நம்பிக்கையை) அடிக்கிறார் என்றாலும் நல்ல படமாக இருந்தால் ரசிப்பேன். நல்ல படமும் தராமல், சமுதாயத்தை சீரழிக்கும் ஒரு கதையைச் சொல்லி இதை ரசி என்றால் ரசிக்க மாட்டேன். விமர்சிப்பேன்.
எனது நண்பர் ஷேர் செய்திருந்த அந்தக் கவிதையைப் படித்தவுடன் விமர்சிக்கத் தோன்றியது. அதற்குத்தான் இந்த பதிவு. இனி
கமல்ஹாசனின் கவிதையைப் பார்ப்போம்.
முதல் தீண்டலுக்கு உடல் சிலிர்த்து
வெட்கத்தில் புன்னகைத்து கடற்கரையில் காற்று வாங்கி கைப்பிடித்து பரவசமாய் நடந்து கன்னத்தில் லேசாய் முத்தமிட்டு
கைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பி
கண்களால் பேசிச் சிரித்து கால் கடுக்க காத்திருந்து காது பிடித்து மெல்லத் திருகி கண்ணீரோடு கட்டியணைத்து
கண்பொத்தி விளையாடி
இடிக்கு பயந்து தோளில் சாய்ந்து செல்லமாய் நெஞ்சில் குத்தி பேசாமல் இருந்து தவிக்கவிட்டு கோயில் சுற்றி, குளம் சுற்றி மழை ரசித்து நனைகையில் துப்பட்டாவில் குடை விரித்து புத்தகத்தில் கடிதம் மறைத்து மணிக்கணக்கில் தொலைபேசி அப்பாவின் அதட்டலுக்கு அஞ்சி, “அவர் ரொம்ப நல்லவர்மா” என அழுது புலம்பி அம்மாவிடம் சொல்லி
ஒருவழியாய் வெற்றி கொள்கிற
காதல் திருமணங்கள் போல இனிப்பதில்லை இன்டர்நெட்டில் தேடியலைந்து பத்துக்குப் பத்து பொருத்தம் பார்த்து பண்ணுகின்ற திருமணகள்!
-
- கமல்ஹாசன்
|
இதைப்
படித்தவுடன் திரு.கமலஹாசன் நேரில் என்னிடம் இருந்திருந்தால் என்னென்ன கேட்டிருப்பேன்
என்பதைக் கற்பனை செய்து பார்த்தேன். அதுதான் இப்படி விமர்சனமாக வந்தது. இனி விமர்சனம்
(சாரி! கமல் சாரிடம் நான் பேசுகிறேன்)
அழுது புலம்பி அம்மாவிடம் சொல்லி, ஒருவழியாய் வெற்றி கொள்கிற காதல் திருமணங்கள் போல இனிப்பதில்லை.
இன்டர்நெட்டில் தேடியலைந்து பத்துக்குப் பத்து பொருத்தம் பார்த்து பண்ணுகின்ற திருமணகள்! அப்படியா?
ஆமாம் நீங்க பண்ணின திருமணங்கள் எல்லாமே காதல் திருமணங்கள்தானே. அதுவெல்லாம் ஏன் கசந்தது உங்களுக்கு? காமவசப்பட்டு செய்வதெல்லாம் காதல் திருமணங்களாகா என்று சொல்ல வர்றீங்களோ!
ஆமாம் நீங்க பண்ணின திருமணங்கள் எல்லாமே காதல் திருமணங்கள்தானே. அதுவெல்லாம் ஏன் கசந்தது உங்களுக்கு? காமவசப்பட்டு செய்வதெல்லாம் காதல் திருமணங்களாகா என்று சொல்ல வர்றீங்களோ!
ஓ… பத்துப்பொருத்தம் பார்த்து திருமணம் செய்து கொண்ட மனைவியுடன்
மட்டும் வாழும் எவனாவது காண்டம் (Condom) பாட்டு எழுத்த முடியுமா?
ஏன் சார்! காதல் செய்யுங்கன்னு சொல்லி மாட்டிக்கிறீங்க.
இப்படிச்சொல்லலாமே, மன்மதன் அம்பு (அதான் காண்டம் பாட்டுலாம் எழுதினீங்களே) கிளைமாக்சில ஒரு நிமிஷத்துல பார்த்த உடனேயே அடுத்தவன் பொண்டாட்டிய மாதவன் கட்டிக்குவாரே.
அதுமாதிரி திருமணங்கள்தான் சிறந்தது சொல்லியிருக்கலாமே!
சார் நமக்கெல்லாம் எதுக்கு சார் காதல், திருமணம் எல்லாம்.
காமவசப்பட்டு சேத்துக்குட்டு வாழறது விட்டு காதல்னுலாம் சொல்லி நமக்கு எட்டாததெல்லாம்
ஏன் சார் சொல்றீங்க? நம்ம பண்ணுதெல்லாம் காதல் இல்ல சார். ஒரு வகை சதை வியாபாரம்தான் (காமம்தான்).
ஒண்ணு சதை வியாபாரம். இல்லன்னா கம்யூனிச வியாபாரம். அதுவும்
இல்லன்னா, இங்க என்னதுடா நல்லதா இருக்குனு பார்த்து அதத் திட்டிதிட்டியே கல்லா கட்டணும்.
அப்படித்தானே. அதுக்கு உங்களுக்கு ஒரு கூட்டம் வேறு.
அது எப்படி, கைப்பிடித்து பரவசமாய் நடந்து, கன்னத்தில் லேசாய் முத்தமிட்டு........ எப்படி சார் இதெல்லாம், உதட்டில் கடினமான முத்தமல்லவா நீங்கள் கொடுப்பீர்கள். (ஓ இது காதல், அது காமமோ)
சேத்துக்குட்டு உன்னதமான வாழ்க்கை வாழுறவுங்க நீங்க.
நாங்க மோசமான பத்து பொருத்தம் பார்த்து கல்யாணம் பண்ணிக்கிற வெட்டிப்பசங்க. இருந்தாலும்
உங்க ரேஞ்ச விட்டு இறங்கி வந்து எங்களுக்கு நல்லதச் சொன்னீங்க பாருங்க. அங்கதான் நீங்க
நிக்கிறீங்க போங்க.
சாத்தான் கூட வேதம் ஓதலாம்… நாம காதல், திருமணம் பத்தியெல்லாம்
பேசலாமா. அதுலாம் நமக்கு ரொம்ப கீழ இருக்கு சார். அதை ஏன் நாம குனிஞ்சு பாக்கணும்.
உங்க வேலை என்ன? நல்லா நடிக்கிறது. நல்ல படங்களை மக்களுக்கு
தர்றது. அதவிட்டுட்டு பாட்டெல்லாம் எழுதி ஏன் சார் பாடு படுறீங்க. எங்களையும் படுத்துறீங்க. “அன்பே சிவம்” “ஹே
ராம்” “விருமாண்டி” மாதிரி படங்களைக் கொடுத்துட்டு கொஞ்சங்கூட மனசாட்சியே
இல்லாம “மும்பை எக்ஸ்பிரஸ்”உம், “மன்மதன் அம்பு”ம் கொடுக்கிறீங்களே உங்களுக்கெல்லாம்
கஷ்டமாவே இல்லையா?
கண்ணதாசனும் காமம்தான் எழுதினார், நீங்களும் காமம்தான் எழுதுறீங்க.
ஆனா உங்க எழுத்துல இருக்கிற வக்கிரம் (இந்தக் குறிப்பிட்ட பாட்டுல இல்ல) கண்ணதாசன்ல இல்ல பாத்தீங்களா… அவர்லாம் ஆட்சி
செய்த இடத்த நீங்க சுத்திப்பாக்கலாம், அவ்வளவுதான். ஆனா நானும் கவிதை எழுதுறேன் பேர்வழினு
இறங்கினா பாக்க சகிக்கவா செய்யுது.
நான் ஏதோ காழ்ப்புணர்ச்சியில் பேசுறதா நினைக்காதீங்க. உங்க
நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் சார். ஆனால் சூப்பர் படம் கொடுத்துட்டு, மட்டமான படம்
கொடுக்கும்போது, நல்லா படிக்கும் ஒரு மாணவன் கோழிமுட்டை வாங்கினா என்ன கோபம் வருமோ
அதவிட நீங்க இப்படி படங்களெயெல்லாம் (“மும்பை எக்ஸ்பிரஸ்” “மன்மதன் அம்பு”) கொடுக்கும்போது அதிக கோபம் வருது . அதவிட இந்தக் கவிதையையும்,
காண்டம் கவிதையையும் படிக்கும்போது கொலைவெறியே வருது.
கண்டபடி மனச அலையவிடாதீங்க சார். எல்லாரும் சிவாஜி இடத்த
நீங்க நிரப்பிட்டீங்க, நிரப்பிடுவீங்கன்னு நம்பிட்டு இருக்காங்க. அந்த நம்பிக்கைய காப்பாத்த
பாருங்க. ஆனால் சுட்டுப்போட்டாலும் சிவாஜி கிட்ட எல்லாம் நீங்க வரமாட்டீங்க. அது உங்களுக்கே
நல்லா தெரிந்திருக்கும். நவராத்திரி பாத்திருப்பீங்களே 9 பாத்திரங்களில் அதிக ஒப்பனை மாற்றம்
இல்லாமலே 9 பாத்திரமும் தனித்தனியா தெரிவது போல் நடித்திருப்பார் சிவாஜி. நீங்க நடிச்ச
தசாவதாரம் படத்தில் 10 கேரக்டரும் ஒப்பனை மாற்றம் அதிகம் இல்லாமல் நீங்கள் நடித்திருந்தால்
எப்படி இருந்திருக்கும்? யோசிங்க. அந்தப் படத்தில் உங்கள் நடிப்பு பாராட்டப்பட வேண்டியதுதான்,
இருந்தாலும், 5 பாக கல்கி “பொன்னியின் செல்வனை” விஞ்ச, பாலகுமாரன் “உடையார்” 6 பாங்கங்கள்
கொடுத்தாரே. அதுபோல் தானே தசாவதாரம். “பொன்னியின் செல்வனை” விஞ்சிவிட்டதா என்ன
“உடையார்”?
கடைசியா ஒரு கேள்வி? உங்கள் பழைய படங்களிலெல்லாம் கமலஹாசன்
என்று பெயர் வருகிறது, ஏன் சார் இப்போது கமல்ஹாசன் என்று மாற்றிக் கொண்டீர்கள். பெரியாரோ,
காரல் மார்க்சோ நியூமராலஜி பாத்து மாத்தி வச்சுக்க சொன்னாங்களா? இன்னும் ஒன்னே ஒன்னு சார் கோவிச்சுக்காதீங்க.
பார்ப்பனீய எதிர்ப்பு திரைப்படங்களைக் கொடுக்குறீங்க சரி! ஆனா… கூட எப்பவும் பார்ப்பனர்களையே
வைத்துக் கொள்கிறீர்களே ஏன்? இதை சாதி துவேசத்திற்காக நான் கேட்கவில்லை. எனக்கு சாதியிலெல்லாம்
நம்பிக்கையில்லை. நீங்கள் சொல்வதுபோல் பார்ப்பனீயம்தான் இந்தியாவை அழித்தது என்பதிலும்
எனக்கு நம்பிக்கையில்லை. ஏதோ கேக்கணும் தோணிச்சு கேட்டுட்டேன். நான் எதுவும் தப்பா
பேசியிருந்தா மன்னிச்சுக்குங்க கமல் சார்!
இப்படி முழுமூச்சுடன் கேள்விகளைக் கேட்டுவிட்டு பயத்தால் ஓடி வந்துவிட்டேன்.
(கமல் “உன்னைப் போல் ஒருவன்” படம் எடுத்து ரிலீஸ் ஆகியிருந்தது, அதற்கான டிவி பிரமோவில்
பேசிக்கொண்டிருந்தார். ஒருவர் “கமல் சார்! எப்படிசார் உங்களுக்கு மட்டும் இப்படிலாம்
தோணுது” என்று கேட்டார். ‘அதெல்லாம் உள்ளையே இருக்கணுண்டா’ என்பது போல ஒரு பதிலைச்
சொன்னார். A Wednesday என்ற இந்தி திரைப்படத்தின் மறு ஆக்கம்தான் “உன்னைப் போல் ஒருவன்”
என்பதை அவர் அங்கு சொல்லவில்லை. அடுத்து ஒரு பெண். “A Wednesdayவில் நடித்திருந்த நசுருதீன்
ஷா அளவுக்கு நீங்கள் நடித்துவிட்டதாக உங்களுக்கு திருப்தி இருக்கிறதா?” என்று கேட்டார்.
அவருக்கு வந்தது பாருங்கள் கோபம். “அவரைவிட நான் கம்மியா பண்ணிருக்கேன் சொன்னா நான்
ஒத்துக்க மாட்டேன். அவரைவிட அதிகமா பண்ணிருக்கேன்னு சொல்லமாட்டேன்” என்பது போல ஒரு பதிலை கோபத்தோடு சொன்னார்.
நல்ல வேளை அந்தப் பெண்மணி நேரில் இல்லை. நாம் இப்படி நேரில் கேட்டுவிட்டு நின்று பொறுமையாக
பதிலைக் கேட்டுக் கொண்டிருந்தால் என்ன நடக்குமோ என்ற பயத்தில் ஓடிவந்துவிட்டேன்)
No comments:
Post a Comment
நான் என் கருத்துகளைப் பதியவே (என் குரலைப் பதிவு செய்யவே) வலைப்பூப்பதிவுகளை இடுகிறேன்.
கண்ணியக்குறைவான மறுமொழிகளை வெளியிட இயலாது.
சில மறுமொழிகளுக்கு நான் பதிலளிக்கவில்லை என்றால், ஒன்று எனக்கு பதில் தெரியவில்லை அல்லது போராடிப் பயனில்லை (இந்தப் பழம் புளிக்கும்) என்ற எனது நிலையே.