Sunday 2 September 2012

அகோரா | ஸ்பானிய திரைப்படம்



தமிழ் ஹிந்து வலைத்தளத்தில் திரு.அரவிந்தன் நீலகண்டனின் அகோரா திரைப்பட விமர்சனம் படித்தேன். படம் பார்க்கும் ஆவலைத் தூண்டியது அந்த விமர்சனம்.

வலைத்தளங்களைத் தேடி அந்தப் படத்தை தரவிறக்கம் செய்து பார்த்தேன். அது ஒரு ஸ்பானிய மொழி திரைப்படம். நான் பார்த்தது ஆங்கிலத்தில்...

தற்போது எகிப்தில் உள்ள அலெக்சாண்டிரியா கி.பி.391ல் ரோமானியப் பேரரசின் ஒரு அங்கமாக இருந்தது. தலைவர்களை உருவாக்கும் ஒரு பெரிய கிரேக்க பள்ளியின் ஆசிரியையாகப் பணி செய்கிறாள் பெண் தத்துவஞானி ஹிபாசியா. டாலமிய புவிமையக் கோட்பாட்டை அதிக அக்கறையோடு மறுத்து பயிற்றுவித்து வந்தாள்.


அந்நகரத்தின் ஒரு ஆலயத்தில் உள்ள அருங்காட்சியகத்தின் பொறுப்பாளராக ஹிபாசியாவின் தந்தை தியான் இருந்தார்.  தனது தந்தையின் அடிமை டேவஸ் மற்றும் தனது இரு சீடர்கள் ஒரீஸ்டஸ் மற்றும் சினேசிஸ் அந்தச் சமூகத்தின் அரசியலில் மூழ்கிக்கிடக்கிறார்கள். தனது சீடர்களில் ஒருவரான ஒரீஸ்டஸ் தன் காதலை அவளிடம் தெரிவிக்கும்போது அதை கண்ணியமாக மறுத்து அறிவியலுக்காக தன்னை அர்ப்பணிக்கிறாள் ஹிபாசியா. டேவஸ் ஹிபாசியாவுக்கு ஆராய்ச்சிகளில் துணையாக இருந்து கொண்டே அவளை ரகசியமாக ஒருதலையாய்க் காதலிக்கிறான்.

ரோமானியப் பேரரசு கிறிஸ்தவமயமாகி வருகிறது. ஆட்சி அதிகாரங்களில் கிறிஸ்தவர்களாக இருப்பதே வசதியானது என்ற நிலை. ஆனால் பேரரசு முழுமையாக கிறிஸ்தவமாகிவிடவில்லை. அந்நேரத்தில் சமூகத்தின் அமைதி கலைகிறது. கிறிஸ்தவர்களுக்கும் மண்ணின் மைந்தர்களான பாகானியர்களுக்கும் போர் நேர்கிறது. கிறிஸ்தவர்கள் வெளிக்கு தெரியாதபடி எண்ணிக்கையில் அதிகரிக்கிறார்கள். பாகானிய தெய்வங்களின் சிலைகளை உடைக்கிறார்கள். பாகானியர்கள் ஒரீஸ்டஸ் மற்றும் ஹிபாசியாவின் தந்தை உட்பட இதை எதிர்த்துப் போரிடுகின்றனர். கிறிஸ்தவர்களை அடித்து விரட்டுகின்றனர். ஓடிப்போன கிறிஸ்தவர்கள் பெரும்படைகளுடன் அலெக்சாண்டிரியாவிற்குத் திரும்புகின்றனர்.

பாகன் கோயிலின் உச்சியிலிருந்து இரத்தவெறியுடன் குவியும் கிறிஸ்தவக் கும்பலைப் பார்த்து, தலைமைப் பூசாரி அதிர்ச்சியுடன் சொல்கிறார், “எங்கிருந்து இத்தனை கிறிஸ்தவர்கள் வந்தார்கள்?”. ஹிபாசியாவின் மாணாக்கர்களில் இருக்கும் கிறிஸ்தவர்களையும் சிறைவைக்க பாகன் பூசாரி ஆணையிடுகிறார். ஹிபாசியா தலையிட்டு, தன்னுடைய மாணவர்கள் எந்த நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தாலும் அவர்களைத் தொடக்கூடாது என வலியுறுத்துகிறாள்.

இவ்வளவு கிறிஸ்தவர்கள் இருப்பார்கள் என்பதை முதலில் பாகானியர்கள் நம்பவேயில்லை. ஆனால் அதுதான் உண்மையாய் இருந்தது. இந்தப் போரில் ஹிபாசியாவின் தந்தை தியான் பலத்த காயமடைகிறார். கிறிஸ்தவர்கள் அந்த அருங்காட்சியகத்திலும் நூலகத்திலும் உள்ள அனைத்து பொக்கிஷங்களையும் அழிக்கின்றனர். ஹிபாசியாவும் மற்ற பாகன்களும் செராபியம் நூலகத்தில் தஞ்சமடைகின்றனர். ரோமானிய மன்னர் சண்டையின் இடையில் புகுந்து சாமாதானம் செய்து வைக்கிறார். இந்தச் சமாதான ஒப்பந்தத்தின்படி பாகன்கள் மன்னிக்கப்படுகின்றனர், ஆனால் கிறிஸ்தவர்கள் ஆந்த நூலகத்தைக் கைப்பற்றி அவர்கள் விருப்பப்படி செய்ய அனுமதிக்கிறார் மன்னர்.

இது வெறும் வழிபாட்டு ஆலயம் மட்டுமல்ல மகளே. இங்கே நம் முன்னோர்களின் அறிவு அனைத்தும் பாதுகாக்கப்பட்டுள்ளது. எனவேதான்எனவேதான் நாம் இதைக் காப்பாற்ற வேண்டும்.”  என்ற தன் தந்தையில் சொல் ஹிபாசியாவுக்கு நினைவுக்கு வருகிறது. ஹிபாசியாவும் மற்ற பாகன்களும் கையில் கிடைத்தவற்றையும் சில முக்கியமான நூல்களையும் காப்பாற்றி அந்த இடத்திலிருந்து தப்பிச் செல்கின்றனர்.

அடிமை டேவஸ் கிறிஸ்தவனாகிறான். கிளாடியஸ் என்ற ஊழியக்காரன் அவனை மூளைச் சலவை செய்கிறான். அந்தக் கிறிஸ்தவ சமூகத்தில் ஒரு உயர்ந்த நிலைக்கு வருகிறான் டேவஸ். தான் ஹிபாசியாவின் தந்தையிடம் அடிமையாக இருந்ததையும், அவரிடம் அடி வாங்கியதையும் நினைக்கிறான். ஹிபாசியா தற்போது ஆதரவின்றி இருப்பது அறிந்து காமங்கொண்டு அவளை வன்கொடுமை செய்கிறான். ஆனால் உடனடியாக மனந்திருந்தி அவளிடம் மண்டியிட்டு தன் வாளைக் கொடுத்து தன்னை வெட்டிவிடச் சொல்கிறான். அதிர்ந்து போயிருந்த அவள் அவனது கழுத்தில் இருந்த அடிமைச்சங்கிலியை அவிழ்த்து அவனைச் சுதந்திர மனிதனாக்குகிறாள்.

பல வருடங்கள் கழிகின்றன இப்போது ஒரீஸ்டஸ் அலெக்சாண்டிரியாவின் தலைவனாக இருக்கிறான். ஆனால் தற்போது கிறிஸ்தவனாகியிருகிறான். ஹிபாசியா சூரியனையும், சந்திரனை அப்போது அவர்கள் அறிந்திருந்த 5 கோள்களின் நகர்வுகளையும், நட்சத்திரங்களையும் கவனித்து ஆராய்ந்து வந்தாள். ஆராய்ச்சியின் முடிவில் உலகம் உருண்டை என்பதைக் கண்டறிகிறாள். கிறிஸ்தவர்கள் இந்தக் கருத்துகளைக் கேட்டு எள்ளி நகையாடுகிறார்கள். டேவசிடம் சிலர் இது குறித்துக் கேட்கின்றனர். அதற்கு அவன் "கடவுள்தான் அறிவார்" என்கிறான்.

ஹிபாசியா சூரிய குடும்பத்தின் நீள் வட்டப்பாதை ஆராய்ச்சிகளையும் செய்கிறாள். தனது கண்டுபிடிப்புகளை சாதாரண உதாரணங்களைக் காட்டி தனது முன்னாள் சீடன் ஒரீஸ்டசை ஏற்கச் செய்கிறாள். கிறிஸ்தவர்கள் ஹிபாசியாவின் ஆசிரியப் பணியைப் பறிக்கிறார்கள். கிறிஸ்தவர்களுக்கு யூதர்களுக்கு பெரிய சண்டை மூள்கிறது. ஒருவரையொருவர் அடித்துக் கொல்கின்றனர். சிரில் என்பவன் கிறிஸ்தவர்களுக்கு தலைவனாக பிஷப்பாக வருகிறான்.

இந்நிலையில் சில யூதர்கள் கிறிஸ்தவர்களைத் திரும்பத் தாக்குகிறார்கள். அதனைப் பயன்படுத்தி தன் அதிகாரத்தை முழுமையாக்க சிரில் யூதர்கள் மீது வன்முறையைத் தூண்டிவிடும் காட்சி, அன்பு எனும் பெயரில் கிறிஸ்தவ இறையியலில் வியாபித்து நிற்கும் வெறுப்பை திறமையாக வெளிக்காட்டுகிறது. “யூதர்களிடம் பரிதாபப்படுங்கள்நம் மீட்பரைக் கொன்ற யூதர்களிடம் பரிதாபப்படுங்கள்ஆண்டவனால் சபிக்கப்பட்டு, நாடிழந்து, நாடோடிகளாத் திரியும் யூதர்களிடம் பரிதாபப்படுங்கள்என்று சொல்லியேஏசுவைக் கொன்றவர்கள்’, ‘ஆண்டவனால் சபிக்கப்பட்டவர்கள்என கிறிஸ்தவர்களிடம் வெறியேற்றுகிறான் சிரில்.

அலெக்ஸாண்ட்ரியா எங்கும் யூதர்கள் கிறிஸ்தவர்களால் வேட்டையாடப்படுகிறார்கள். யூதப்பெண்கள் பலாத்காரப்படுத்தப்படுகிறார்கள். கலவரம் நடக்கும் வீதியில் ஹிபாசிய நடக்கிறாள். அவளது பழைய அடிமை, இப்போது அவன் ஒரு கிறிஸ்தவ வீரன். அவன் கையில் உள்ள வாளில் யூத ரத்தம்; முகத்திலும் அது தெளித்திருக்கிறது. டேவஸ்தானா அவன். ஹிபாசியாவின் பார்வை அவனுள் குற்ற உணர்வை ஏற்படுத்துகிறது. தவிர்க்க இயலாத ஐயங்கள் அவனுக்கு எழுகின்றனகிறிஸ்தவனாகும் முன்னால் என்னால் மன்னிக்க முடிந்தது. இப்போது ஏன் முடியவில்லை? என்று கிளாடியசிடம் கேட்கிறான். மற்ற கிறிஸ்தவச் சகோதரர்கள் சொல்கிறார்கள், மன்னிப்பது ஆண்டவனின் வேலை. உன்னை ஆண்டவன் நிலைக்கு உயர்த்திக் கொள்ளாதே.” கிளாடியஸ் இந்த இடத்திலும் அவனை மூளைச் சலவை செய்கிறான்.

சிரில் ஒரீஸ்டசின் மீது ஹிபாசியாவுக்கு இருக்கும் ஆளுமையைக் கவனிக்கிறான். ஒரீஸ்டசிடம் ஒரு கிறிஸ்தவ பிரசங்க கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யும்படி பணிக்கிறான். தன் அதிகாரத்தை முழுமைப்படுத்துவதில் ஹிபாசியா பெரும் தடைக்கல்லாக இருப்பதை உணர்கிறான் சிரில். அவளை அகற்ற முடிவெடுக்கிறான். அந்த ஞாயிறுப் பிரசங்கத்தில் பெண்கள் ஆண்களுக்கு அடிமைகளாக இருக்க வேண்டும்; அவர்கள் உரை ஆற்றக்கூடாது என்பன போன்ற இறை வசனங்களைச் சொல்கிறான்.

பைபிளை மேலே உயர்த்தி, இந்த இறை வார்த்தைக்குக் கட்டுப்படுங்கள் என்கிறான். அலெக்ஸாண்ட்ரியாவின் அதிகார வர்க்கமே பாகனியத்தைக் கைவிட்டு கிறிஸ்தவத்தைத் தழுவுகிறது. மண்டியிட்டு, ‘பெண்கள் சபைகளில் பேசக்கூடாது ஆண்களுக்கு கட்டுப்பட வேண்டும்என்பதை ஏற்கிறது. இறுதியாக இதை எதிர்க்கும் ஒரீஸ்டசும் தாக்கப்படுகிறான். அவனைத் தாக்கியவன் புனிதனாக (Saintஆக) அறிவிக்கப்படுகிறான்.

அனைவரும் முழங்காலிட்டு வணங்குகிறார்கள். ஆனால் ஹிபாசியா மண்டியிடவில்லை. இதைக்காரணம் காட்டி ஓரீஸ்டசிடம் அவளைக் கொல்லச்சொல்கிறான் சிரில். ஓரீஸ்டஸ் எவ்வளவோ போராடிப் பார்க்கிறான். ஆனால் முடியவில்லை. நல்ல வேளையாக ஹிபாசியாவின் பழைய சீடன் சினேசிஸ் ஆபத்தாந்தவனாக வருகிறான். அவன் செரீனின் பிஷப்பாக இருக்கிறான். அவள் கிறிஸ்தவத்திற்கு மாறாமல் தன்னால் எந்த உதவியும் செய்ய முடியாது என்கிறான் சினேசிஸ். ஹிபாசியா மறுக்கிறாள்.

ஹிபாசியா மேலும் ஆய்வுகளைச் செய்து பூமி சூரியனை வட்டமாகச் சுற்றவில்லை, நீள்வட்டமாகச் சுற்றுகிறது என்று கண்டுபிடிக்கிறாள். அந்தச் சமயத்தில் சிரில் அவளைச் சூனியக்காரி என்று பட்டம் கட்டி ஒரு பெரிய கிறிஸ்தவ கும்பலைக் கொண்டு வந்து கல்லால் அடித்து கொல்ல ஏற்பாடு செய்கிறான். அவர்கள் ஹிபாசியாவை நிர்வாணப்படுத்துகின்றனர். அந்நிலையில் அவளைக் கல்லால் அடித்துக் கொல்லத் தயாராகின்றனர். அப்போது டேவஸ் வருகிறான். அனைவரும் கற்களை எடுக்க வெளியே வருகின்றனர். அந்நேரத்தில் டேவஸ் அவளது கழுத்தை நெறித்து கொன்று விட்டு, அவள் மயக்கமாகிவிட்டாள் என்று பொய் சொல்கிறான். கூட்டமும் அவள் பிணத்தின் மேல் கல் எறிகின்றனர் மயக்கமாயிருக்கிறாளென்று.

இந்தப் படம் 2009ல் ஸ்பானிஷிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்தது. அலெஜான்ட்ரோ அமேனாபர் என்பவர் எழுதி இயக்கினார். ராச்சேல் வெய்ஸ் என்பவர் முக்கிய பாத்திரமான ஹிபாசியா பார்த்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் முழுவதும் ஹிபாசியா என்ற பாத்திரம் பழமையான ஞானத்தைக் காப்பாற்றப் போராடும் பாத்திரமாகப் படைக்கப்பட்டிருந்தது. இந்தப் படம் அறிவியலுக்கு மதத்திற்கும் உள்ள சம்பந்தத்தை, அவை சந்திக்கும் தருணங்களை வெளிச்சம்போட்டு காட்டும் வண்ணம் படைக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தின் தலைப்பு "அகோரா". அகோரா என்பது கிரேக்கத்தில் கூடி விவாதிக்கும் இடம் என்பது பொருள். இந்தப் படத்தை விநியோகிக்க யாரும் கிடைக்கவில்லை. ஆனால் இந்தப் படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கெடுத்து விருதைத்தட்டியது. மேலும் பல விருதுகளையும் தட்டிச் சென்றது.

அருமையான படம். ஒரு பட விமர்சனத்தில் முழு கதையையும் சொல்லலாமா என்றால், இந்த முக்கியப் படம் இந்திய திரையரங்குகளுக்கு வருமா என்பது ஐயமேஆனால் திரைப்படம் என்ன, இந்த திரைப்படத்தில் காட்டப்படும் காட்சிகளே இந்தியாவில் உண்மையாக அரங்கேறலாம்! அந்த விதத்தில் அலெக்ஸாண்ட்ரியாவின் இறுதிப் பாகனீயத் தத்துவஞானி குறித்த இப்படம் ஹிந்துக்களுக்கு அவர்கள் வருங்காலம் குறித்த முன்னறிவிப்பு என்றே கருதலாம்.



யூடியூபில் முழு ஸ்பானிய படத்தையும் யாரோ ஒருவர் வலையேற்றியிருக்கிறார்கள், படத்தை யூடியூபில் பார்க்க இங்கே சொடுக்கவும். ஆங்கிலத்தில் பார்க்க வேண்டும் என்றால் வேறு வழிகளில் இண்டெர்நெட்டில் தேடி பார்த்துக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

நான் என் கருத்துகளைப் பதியவே (என் குரலைப் பதிவு செய்யவே) வலைப்பூப்பதிவுகளை இடுகிறேன்.

கண்ணியக்குறைவான மறுமொழிகளை வெளியிட இயலாது.

சில மறுமொழிகளுக்கு நான் பதிலளிக்கவில்லை என்றால், ஒன்று எனக்கு பதில் தெரியவில்லை அல்லது போராடிப் பயனில்லை (இந்தப் பழம் புளிக்கும்) என்ற எனது நிலையே.