Monday, 7 January 2013

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்



யதார்த்தமான வசனங்கள். யதார்த்தமான நடிப்பு, வசனங்களைக் குறைத்து முகபாவனைகளில் உணர்ச்சியை வெளிக்கொணர்வது என்பன போன்ற அம்சங்களால் இந்தப் படம் துண்டாக மற்ற படங்களிலிருந்து தனியாகத் தெரிகிறது.


படம் ஆரம்பத்திலிருந்து ஒரு பத்து நிமிடம் என்னடா இது படம், என்னதாண்டா சொல்லப்போறாங்கனு இருந்தது. கதாநாயகனுக்கு மறதி நோய் வந்ததும், அடுத்த என்ன என்று நம்மை நகரவிடாமல் பார்க்க வைக்கிறது படம். படம்  காமடியாவும் இருக்கு, திரில்லிங்காவும் இருக்கு.

விஜய் சேதுபதிதான் கதாநாயகன் என்றாலும் மற்ற மூன்று நண்பர்களும்தான் படத்தின் கதாநாயகனாகத் தெரிகிறார்கள். குறிப்பாக பக்ஸ் (பகவதி), பஜ்ஜி (ராஜ்குமார்)யின் முகபாவனைகள், சரஸ் ஆகியோரின் நடிப்பே மொத்த திரைக்கதையும்.

படத்தின் கதை இதுதான் : பிரேம்குமாருக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள். பிரச்சனைகளுக்கிடையே காதல் வேறு, பெற்றோரின் எதிர்ப்பை மீறி, அவர்களைச் சம்மதிக்க வைத்து திருமணத்திற்கு ஏற்பாடாகிறது. அந்த வேளையில் நண்பர்களுடன் கிரிகெட் விளையாடப் போக, பஜ்ஜி (பாலாஜி) அடிக்கும் பந்தைக் கேட்ச் செய்யும் முயற்சியில் கீழே விழுந்து தலையில் அடிபடுகிறது. சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்கிறார். நண்பர்கள் பயந்து பிரேம்குமாரின் வீட்டிற்குத் தகவல் கொடுக்கமால் அடுத்த நாள் நடக்க இருக்கும் திருமணத்தை எப்படி நடத்தி வைக்கிறார்கள். பிரேம் குமாருக்கு சுய நினைவு திரும்பியதா இல்லையா என்பதே கதை.

சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி ஒரு வருடத்திற்கு நடந்தது எதையும் மறந்துவிட்டுத் தடுமாறும் நண்பனை ஒவ்வொரு இடமாகக் கடத்திச் செல்வதில் இயல்பு கெடாமல் அழகாக காட்டியிருக்கிறார்கள். ஒவ்வொரு காட்சியிலும் காமடியும் திரில்லிங்கான அனுபவமும் தருகிறார்கள்.

"என்னாச்சி... கேட்ச் பிடிக்கப் போனேன்... கீழே விழுந்தேன்... சே... கேட்ச விட்டுட்டேனா... பின்னால அடிபட்டுச்சுலா... மெடுலா அப்லங்காடாவில் அடிபட்டிருக்கும். அதனால் ஒன்னும் இல்ல மச்சி" இதையே படம் முழுக்க சொல்கிறார் கதாநாயகன்.

"காதல்னா ஆணி அடிச்ச மாதிரிடா" என்று வீர வசனம் பேசும் பக்ஸ். காதலியையே மறந்து நிற்கும் நாயகனைக் காட்டி பஜ்ஜி முறைக்கும் போது காட்டும் முகவெளிப்பாடு ரசிக்க வைக்கிறது.

"சார், இது என்ன நோய் சார்" என்று பஜ்ஜி பக்ஸிடம் கேட்க, "அதுலாம் உனக்கு புரியாது" என்று பக்ஸ் சொல்ல "சொல்லுங்க பாஸ் அது என்னதான் தெரிஞ்சுக்குவோம்" என்று பஜ்ஜி இழுத்துவிட்டதும். பக்ஸ் நீண்ட விளக்கும் கொடுத்து பஜ்ஜியை மிரட்டும் போது பஜ்ஜி காட்டும் முகமாற்றங்கள் அருமை.

"டே... என்னடா... நீ சொன்னா மட்டும் பில்டிங் மேல இருந்து குதிப்பேன்றான். நான் சொன்னா என்ன மயித்துக்குடா குதிக்கணும்றான். என்னடா உங்களுக்குள்ள மேட்டரு" என்று பஜ்ஜி கேட்க "நான் சின்ன வயிசுல ரிக்கார்டு நோட்டுக்கு படம் வரஞ்சு கொடுத்தேன். அதான்" என்று அப்பாவித்தனமாக சரஸ் சொல்வதும் ரசிக்க வைக்கிறது. அந்தக் காட்சியில் மூவரின் நடிப்பும் அருமையாக இருக்கிறது.

"அப்பா... பேய் மாதிரி இருக்காடா" என்று சொன்னதும் "அண்ணா. என்னண்ணா சொல்றாரு." என்று நாயகி அழும் காட்சியும். அதன்பிறகு சற்று விலகி "ஏன்டீ, மேக்அப் ரொம்ப அதிகமாவா இருக்கு" என்று தனது தோழியிடம் கேட்கும் நாயகியும் மனதைக் கவருகிறார். அவரது பின்னணிக் குரல் அழகாக இருக்கிறது. நாயகி சிறிது நேரம் வந்தாலும் அவருக்கு கொடுத்தப் பணியை செவ்வனே செய்திருக்கிறார்.

தாலிய யார்ரா கட்டுனா என்று குழம்புவது அருமை. "நீ சொன்னா தெரியாத பொண்ணு கழுத்துல கூட தாலி கட்டுவேன்"னு ரிக்கார்ட் புக்குக்கு வரஞ்சு கொடுத்த ஒரே காரணத்துக்காக நண்பனிடம் சொல்வது நம்பும்படியாக இல்லை. இருந்தாலும் கதையோட்டத்தை அது கெடுக்கவில்லை.

படம், பாடல்களே இல்லாமலும் ஜெயிக்கும் என்பதற்கு இந்தப் படம் ஒரு பெரிய உதாரணம். குடும்பத்துடன் உட்கார்ந்து எந்த சஞ்சலமும் இல்லாமல் இந்தப் படத்தைப் பார்க்கலாம்.

கடைசி வரை, நாயகனுக்கு ஞாபகம் திரும்புமா என்று திகைக்க வைத்து இந்தப் படத்தின் மறைமுக கதாநாயகனான இயக்குனர் படத்தை வெற்றிக்கரை சேர்த்துவிட்டார்.

No comments:

Post a Comment

நான் என் கருத்துகளைப் பதியவே (என் குரலைப் பதிவு செய்யவே) வலைப்பூப்பதிவுகளை இடுகிறேன்.

கண்ணியக்குறைவான மறுமொழிகளை வெளியிட இயலாது.

சில மறுமொழிகளுக்கு நான் பதிலளிக்கவில்லை என்றால், ஒன்று எனக்கு பதில் தெரியவில்லை அல்லது போராடிப் பயனில்லை (இந்தப் பழம் புளிக்கும்) என்ற எனது நிலையே.