Saturday 11 May 2013

ஷெர்லாக் ஹோம்ஸ் - A Study in Pinkஷெர்லாக் ஹோம்ஸ் நாவல்கள் படித்திருக்கிறீர்களா? அந்த நாவல்களைப் படிக்கும்போது ஏற்படும் அதே பரபரப்பு, BBC தயாரித்து, BBC One மற்றும் BBC HDல் வெளியான "எ ஸ்டடி இன் பிங்க்" (A Study in Pink) ஷெர்லாக் ஹோம்ஸ் -ஐ பார்க்கும் போதும் ஏற்படுகிறது.

இது பிபிசி தயாரிக்கும் "ஷெர்லாக்" என்ற தொடர் நாடகத்தின் முதல் பகுதியாகும். இந்த எபிசோடை ஸ்டீபன் மொபாட் என்பவர் எழுதியிருக்கிறார். பவுல் மெக்கியுகன் என்பவர் இயக்கியிருக்கிறார்.

இந்த நாடகம்வ சர் ஆர்தர் கோனன் டாயல் (Sir Arthur Conan Doyleஎழுதிய "எ ஸ்டடி இன் ஸ்கார்லெட்" (A Study in Scarlet)  என்ற நாவலைத் தழுவி, தற்காலச் சூழலுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டது.

இனி கதை…

ஷெர்லாக் ஹோம்ஸ் (பெனடிக்ட் கம்பர்பேட்ச்) ஒரு அதிமேதாவி துப்பறியும் நிபுணர். ஒருவரைப் பார்க்கும்பொழுதே, அவரது வரலாற்றையே படிக்கும் திறன் கொண்டவர்.


ஜான் வாட்சன் (மார்டி ஃப்ரீமேன்) என்பவர் அப்கானிஸ்தானில் நடந்த போரில் கலந்து கொண்டு, அங்கு வேலை செய்த ஒரு ஒரு இராணுவ டாக்டர். இருவருக்கும் பொதுவான நண்பர் ஒருவரால் இவர்கள் இருவரும் 221B, பாஸ்கர்வில்லிஸ் என்ற முகவரியில் இருக்கும் வீட்டை வாடகைக்குப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

லண்டனில் தொடர்ச்சியாகக் கொலைகள் நடக்கின்றன. இவை அனைத்தும் ஏதோ ஒரு புள்ளியில் இணைகின்றன. கொலையாக அனைவரும் ஏதோ ஒரு வகையில் பிங்க் வண்ணத்துடன் இணைந்திருக்கிறார்கள். இது ஒரு சீரியர் கில்லர் செய்யும் வினை என்று துப்பறியும் நிபுரணரான இன்ஸ்பெக்டர் லெஸ்டிரேட் நினைக்கிறார். அடுத்து ஒரு கொலை நடக்கும் போது அந்த இடத்திற்கு ஷெர்லாக் ஹோம்ஸ் வரவழைக்கப்படுகிறார். அங்கு ஒரு பெண் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார். அந்தப் பெண் திருமண பந்தத்தால் வெறுப்புண்டு, தொடர் வேசித்தனம் செய்பவர் என்பதை ஷெர்லாக் ஹோம்ஸ் அவளது அடையாளங்களை வைத்துக் கண்டுபிடிக்கிறார். இதற்கு முன்பு கொலையுண்டவர்களைப் போல இல்லாமல், சாவதற்கு முன்பு தரையில் "Rache" என்று எழுதி வைத்திருக்கிறாள். கைரேகைகளைச் சோதனை செய்யும் ஆண்டர்சன் அது ஜெர்மனில் பழி என்ற சொல்லாகும் என்கிறார். ஷெர்லாக் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஷெர்லாக் அந்த மங்கையில் கால்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் மண்ணின் கோலத்தைப் பார்க்கிறார். அது, அவள் கொண்டு வந்த சூட்கேஸ் சக்கரத்தில் இருந்து தெரித்திருக்க வேண்டும் என்று எண்ணி. சூட்கேசைத் தேடுகிறார். ஆனால், அது அகப்படவில்லை. போலீசும் ஒரு சூட்கேசையும் காணவில்லை. ஷெர்லாக் தனது தர்க்க புத்தியால் அதைத் தேடிக் கண்டுபிடிக்கிறார்.

அதேவேளையில், வாட்சனுக்கு ஒரு ஃபோன் வருகிறது. தன்னை வந்து பார்க்கும்படி ஒரு குரல் சொல்கிறது. வாட்சனும் செல்கிறார். ஒரு பெண் வந்து அழைத்துச் செல்கிறார். அங்கே அவர் சந்திக்கும் மனிதர், ஷெர்லாக்கை உளவு பார்ப்பதற்கு வாட்சனுக்குப் பணம் தருவதாகச் சொல்கிறார். ஆனால் வாட்சன் அதை மறுத்துவிட்டு, 221, பாஸ்கர்வில்லிஸ்க்கு சென்றுவிடுகிறார். அங்கு வாட்சனிடம் ஷெர்லாக், நான்காவதாக கொல்லப்படப் போகும் மனிதருக்கு ஒரு மெசேஜ் அனுப்பச் சொல்கிறார். அது ஒரு ரெஸ்டாரன்ட், அங்கு ஒரு வாடகைக் கார் ஒன்றைக் கவனிக்கிறார். சந்தேகம் எழுகிறது. இவரைக் கண்டதும் அந்தக் காரில் இருப்பவர் பறந்து விடுகிறார். ஆனால் ஷெர்லாக்குக்கு இருக்கும் லண்டன் வீதிகளின் ஞானத்தால், அந்தக் காரை எளிதாக ஓடியே அடைந்துவிடுகிறார். ஆனால், அதில் இருப்பது சம்பந்தமில்லாத ஒரு அமெரிக்கன் என்பதை அறிகிறார்.

ஷெர்லாக்குக்கு எல்லாம் தெரியும் என்று யூகிக்கும் ஸ்காட் போலீஸ், அவரது வீட்டைச் சல்லடையாகத் தேடுகின்றனர். ஆனால் ஒன்றும் கிடைக்கவில்லை. "Rachel" என்பது ஒரு மின்னஞ்சல் முகவரியின் (E-mail ID) கடவுச் சொல் (Password) என்று நினைக்கிறார் ஷெர்லாக். கொல்லப்பட்டவரின் தொலைபேசி கொலையாளியிடம் இருக்க வேண்டும். அந்தத் தொலைபேசியில் இந்த மின்னஞ்சல் தொடர்பு இருக்க வேண்டும். ஆகையால், GPS உதவியுடன் கொலையாளியைப் பிடித்துவிடலாம் என்று தீர்மானிக்கிறார். அதே நேரத்தில் வாட்சன் அந்த GPS சிக்னல் அவர்கள் இருக்கும் வீட்டிலிருந்தே வருகிறது என்று சொல்கிறார். வீட்டு முதலாளி Mrs.ஹட்சன் வெளியே ஒரு வாடகை கார் வந்து ஷெர்லாக்குக்காகக் காத்திருப்பதாகச் சொல்கிறார். ஷெர்லாக் அந்த இடத்தைவிட்டு அகன்று வாடகைக் காருக்குள் நுழைகிறார். அந்த வாடகைக்காரின் வயதான ஓட்டுனர், தானே நடக்கும் கொலைக்கெல்லாம் காரணம் என்றும், ஆனால் யாரையும் தான் கொல்வதில்லை என்றும், தன்னிடம் பேசும் யாரும் தானாகவே தங்கள் முடிவைத் தேடிக் கொள்கிறார்கள் என்றும் சொல்கிறார். ஷெர்லாக்குக்கு இந்தப் புதிரை விடுவிக்க சவால் விடுகிறார்.

அவர்கள் இருவரும் ஒரு பள்ளி வளாகத்திற்குள் வருகின்றனர். ஓட்டுனர், ஒரு துப்பாக்கியையும், இரண்டு பாட்டில்களையும் எடுத்து வைக்கிறார். "இந்த இருபாட்டில்களில் ஒன்று தீங்கற்றது என்றும், மற்றொன்று தீங்கானது என்று, அதிலொன்றை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் நான் அவர்களுக்குச் சொல்வேன். அவர்கள் தேர்ந்தெடுத்ததை விடுத்து இருக்கும் மற்றொன்றை நான் உண்பேன் என்று சத்தியம் செய்துவிடுவேன். இதுவரை நான் அவர்கள் தேர்ந்தெடுக்காத்தை உண்டு சாகவில்லை. அவர்கள் எதற்கும் உடன்படவில்லை என்றால் துப்பாக்கியை எடுத்துக் கொன்றுவிடுவேன். இது ஒரு அருமையான விளையாட்டு" என்று ஓட்டுனர் ஷெர்லாக்கிடம் சொல்லிவிட்டு, அதே போல ஷெர்லாக்கும் செய்ய வேண்டும் என்று நிர்பந்திக்கிறார். அந்த ஓட்டுனர் மூளையில் இரத்தம் விரித்தி அடைந்து இறக்கப் போகிறார் என்பதை ஷெர்லாக் சரியாகக் கணிக்கிறார். ஆனால் அது ஒன்று அவர் மக்களைக் கொல்வதற்கான காரணமாக இருக்காது. ஓட்டுனர், ஷெர்லாக்கின் விசிறி ஒருவர் இப்படிச் செய்யச் சொல்வதாகவும், தான் செய்யும் ஒவ்வொரு கொலைக்கும், தனது குழந்தைகளுக்குச் செலவிற்குப் பணம் கொடுப்பதாகவும் ஒத்துக் கொள்கிறான்.

ஷெர்லாக் ஓட்டுனர் வைத்திருப்பது பொய் துப்பாக்கி என்றும், அது வெறும் சிகரெட் லைட்டர்தான் என்பதையும் நிரூபித்து, எழுந்து போக எத்தனிக்கிறார். அப்போதும், ஓட்டுனர், இந்தப் புதிரைத் தீர்த்துவிட்டுப் போங்கள் என்று கட்டாயப் படுத்துகிறார். ஷெர்லாக் ஒரு பாட்டிலைத் தேர்ந்தெடுக்கிறார்.

அதேவேளையில், வாட்சன் GPS உதவியுடன் அவர்கள் இருக்கும் இடத்தை அடைந்து, பக்கத்து பில்டிங்கில் இருந்து ஓட்டுநரைச் சுட்டுத் தள்ளுகிறார். கீழே விழும் ஓட்டுநரிடம் தான் சரியான பாட்டிலைத் தேர்ந்தெடுத்திருக்கிறேனா என்றும், அவருக்குப் பணம் அளிக்கும் தனது விசிறி யார் என்றும் ஷெர்லாக் கேட்கிறார். ஓட்டுநர் "மோரியார்டி" என்று சொல்கிறார்.

ஸ்காட் போலீஸ், அந்த வளாகத்தைச் சுற்றிக் கொள்கிறது. ஷெர்லாக் ஓட்டுநரை நன்கு ஆராய்கிறார். சுட்டது வாட்சனாகத் தான் இருக்க வேண்டும் என்று கணிக்கிறார். உடனே, இன்ஸ்பெக்டர் லெஸ்டிரேட் இடம், தான் இதுவரை தந்த துப்புகளை மறந்துவிடும்படி சொல்கிறார். ஷெர்லாக்கும் வாட்சனும் அந்த இடத்தை விட்டு நகர்கின்றனர். அப்போது ஒரு மனிதர் வந்து குறுக்கே நிற்கிறார். அவர்தான் வாட்சனுக்கு பணம் கொடுக்க முன்வந்த மைக்ராப்ட். அவர் ஷெர்லாக்கின் அண்ணன்.

      கிட்டத்தட்ட முழுக்கதையையும் சொல்லிவிட்டேன் என்று நினைக்கிறேன்.

      ஷெர்லாக்காக நடித்திருப்பவரும், வாட்சனாக நடித்திருப்பவரும் அந்தப் பாத்திரங்களுக்கு அருமையான தேர்வுகள். ஓட்டுநராக நடித்திருப்பவரும் அருமையாக நடித்திருக்கிறார். ஒரே ஒரு குறை ஷெர்லாக் பேசும் போது மிகவும் வேகமாகப் பேசுகிறார். சில இடங்களில் அவர் என்ன பேசுகிறார் என்பதைப் புரிந்து கொள்ளவே நேரம் பிடிக்கிறது. இணையத்தில் தரவிறக்கிப் பார்ப்பதால், ஒவ்வொரு கட்டத்தையும் நிறுத்தி நிதானித்து பார்க்க முடிந்தது.

      இயக்கம் அருமை. கேமரா மிக மிக அருமை. அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு திரில்லர் நாடகம்.

      கடைசியாகத் தான், நான் பார்த்தது படமல்ல நாடகம் என்ற நினைவே வந்தது. அந்த அளவிற்கு ஹாலிவுட்டைத் தூக்கி சாப்பிட்டிருக்கிறது இந்த நாடகம். மொத்தம் ஆறு எபிசோடுகள் இதுவரை வந்திருக்கின்றன என்று நினைக்கிறேன். அதில் முதல் எபிசோட் தான். இந்த "A Study in Pink"

      நாடகத்தைப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறதா?, கூகிளில் தேடுங்கள்.

No comments:

Post a Comment

நான் என் கருத்துகளைப் பதியவே (என் குரலைப் பதிவு செய்யவே) வலைப்பூப்பதிவுகளை இடுகிறேன்.

கண்ணியக்குறைவான மறுமொழிகளை வெளியிட இயலாது.

சில மறுமொழிகளுக்கு நான் பதிலளிக்கவில்லை என்றால், ஒன்று எனக்கு பதில் தெரியவில்லை அல்லது போராடிப் பயனில்லை (இந்தப் பழம் புளிக்கும்) என்ற எனது நிலையே.