Sunday, 2 September 2012

நான் ஈ



பிந்து (சமந்தா) என்ற மைக்ரோ ஆர்டிஸ்ட் வீட்டிற்கு எதிரில் நானி (நானி) என்ற இளைஞன் வசிக்கிறான். பிந்து ஒரு மைக்ரோ ஆர்ட் பிராஜெட் செய்து கொண்டிருக்கிறாள். நானி பிந்துவைக் காதலிக்கிறான். பிந்து அவனைக் காதலித்தாலும் காட்டிக் கொள்ளாமல் அவனை அலைய விடுகிறாள்.

சுதீப் (சுதீப்) பெண்பித்தம் பிடித்த ஒரு பெரிய கோடீஸ்வர தொழிலதிபர். பணத்திற்காக மனைவியையே கொலை செய்யும் அளவிற்கு கொடுமைக்காரர். ஒரு நாள் பிந்து சுதீப்பின் அலுவலகத்திற்கு நன்கொடை வாங்குவதற்காகச் செல்கிறாள்.
அவளைப் பார்க்காமலேயே நன்கொடை கொடுக்க மறுக்க நினைத்த சுதீப், வாசல் வழியாக வரும் பிந்துவைப் பார்க்கிறார். காமம் தலைக்கேறி அவளை அலுவலகத்திற்கு வரச் சொல்கிறார். 15 லட்சம் நன்கொடையாகக் கொடுத்து மதிய உணவு விருந்துக்கு அழைக்கிறார்.

ரெஸ்டாரன்டுக்குச் செல்கிறார்கள். அங்கு வெளியே வேலை செய்துகொண்டிருக்கும் நானியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறாள் பிந்து. சுதீப்புக்குப் புரிந்து விடுகிறது. நானி அழைத்து கொல்கிறார் சுதீப்.

இறந்த நானி ஈயாக மாறி சுதீப்பை துவட்டி எடுப்பதே மீதி கதை.

இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் (ஸ்ரீசைல ஸ்ரீ ராஜமௌலி) பத்தாவது படம் தான் இந்த "நான் ஈ". இந்தப் படம் உலகத்தையே பிரமிக்க வைத்திருக்கிறது என்றால் அது மிகையில்லை. இப்படி ஒரு திரைக்கதையைச் சிந்தித்தற்கே இயக்குனருக்கு பெரிய பாராட்டு தெரிவிக்க வேண்டும்.

சாதாரண அம்புலிமாமா கதைக்கு, திரைக்கதை அமைத்து அதை வெற்றிகரமாக இயக்கி அதை பிளாக்பஸ்டர் படமாக ஆக்கியிருக்கிறார் இயக்குனர். இதற்கு முன் இவர் இயக்கியிருந்த "மாவீரன்" படம் தெலுங்கில் எடுத்திருந்தாலும் தமிழிலும் டப் செய்யப்பட்டு வசூலை அள்ளியது. அதன் தொடர்ச்சியாக இந்தப் படமும் வெளியிட்ட இடங்களில் எல்லாம் வசூலை அள்ளிக்கொண்டிருக்கிறது.

பெரிய நட்சத்திர அந்தஸ்து இல்லாத ஒரு படம், உலக அளவில் பேசப்பட காரணம் இயக்குனரின் சாதுர்யமே. (வெளிநாடுகளில் அல்டிமேட் ஸ்பைடர்மேனைத் தவிர்த்துவிட்டு இந்தப் படத்திற்கு கூட்டம் அலைமோதுகிறதாமே)

தமிழில் இதுபோன்ற கிராபிக்ஸ் வேலையை சங்கரும் செய்யவில்லை கமலும் செய்யவில்லை என்ற பாராட்டே இயக்குனருக்கும் மற்றும் கிராபிக்ஸ் வல்லுனர்களுக்கு கிடைத்த ஆஸ்கராகும். ரோபோ மற்றும் தசாவதாரம் படங்களில் இருந்த கிராபிக்ஸ்களையெல்லாம் தூக்கி சாப்பிட்டுவிட்டது இந்த நான் ஈ.

பல இடங்களில் இது கிராபிக்ஸ் என்றே தோன்றாத அளவுக்கு கிராபிக்சைக் கையாண்டிருக்கிறார்கள். கிராபிக்சை மையமாக வைத்து சூப்பராக படம் எடுக்க டைனாசரெல்லாம் தேவையில்லை சாதாரண ஈ போதும் என்று உலகத்திற்குச் சுட்டிக் காட்டியிருக்கிறார் இயக்குனர். இயக்குனர் எந்த அளவுக்கு பாராட்டப்பட வேண்டியவரோ அதே அளவு பாராட்டப்பட வேண்டியவர் Cinematographer செந்தில்குமார். காட்சிகள் அனைத்திலும் அவ்வளவு துல்லியம்.

ராகுல் வேணுகோபால், ஆடெல் அடிலி, பீட்டர் டிரேப்பர் ஆகியோர் விஷூவல் எபெக்ட்ஸூக்கு பொறுப்பேற்றிருக்கிறார்கள். இதில் எடிடிங்கும் சேர்த்துப் பார்த்திருக்கும் ராகுல் வேணுகோபால் பெரிதும் பாராட்டப்பட வேண்டியவர்.

ஒரு காட்சி ஈ பறந்து வருகிறது. ஒரு டியூபிற்குள் நுழைகிறது. அப்படியே வெளியே வந்து பறந்து சுதீப்பைத் தாக்குகிறது. இவ்வளவு தூரத்தையும் ஒரே ஷாட்டாக கேமரா பின்தொடர்ந்தபடி செல்கிறது. அற்புதம். அந்தக் காட்சியை கவனித்துப் பாருங்கள். அதில் கிராபிக்ஸ் இருக்கிறது என்றால் நம்புவதற்கு சற்று கடினமாகத்தான் இருக்கிறது.

படத்தில் இரண்டே பாடல்கள்தான். வலிய எந்தப் பாடலையும் திணிக்கவில்லை என்பதே படத்தின் விறுவிறுப்பைக் கூட்டியிருக்கிறது. "ஈடா ஈடா ஈடா'' பாடல் தாளம்போட வைக்கிறது. வரிகளும் அழகாகப் பொருந்துகின்றன. சிறுவர்களுக்கு இந்தப் பாடல் மிகவும் பிடித்திருக்கிறது. பின்னணி இசை படத்திற்கு பெரிய பிளஸ். M.M.கீரவாணி இங்கே பாராட்டப்பட வேண்டியவர்.

இந்தப் படம் தெலுங்கிலும் தமிழிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டது. மலையாளத்தில் "ஈசா" என்றும், இந்தியில் "மக்கி" என்றும் டப் செய்யப்பட்டுள்ளது.

படத்தின் வில்லன் சுதீப் அற்புதமாக நடித்திருக்கிறார். சமந்தாவிற்கு கிடைத்த வாய்ப்புகளிலெல்லாம் அளவான தேவையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குறைந்த அளவு காட்சிகளில் வந்திருந்தாலும் நானியும் கலக்கியிருக்கிறார்.

இப்படியே எல்லோரையும் தனித்தனியாகப் பாராட்டிக் கொண்டிருக்காமல் மொத்த யூனிட்டையே பாராட்டி விடலாம் அந்த அளவுக்கு அற்புதமான டீம் ஒர்க் தான் "நான் ஈ". என்னதான் டீம் ஒர்க்கா இருந்தாலும், அந்த டீம் ஒர்க்கிற்கு தலைமையேற்ற ராஜமௌலிக்கு ஒரே குரலாக ஒரு "ஓ" போடலாம்.

1 comment:

  1. watch Naan E Full Movie Here

    http://palathum10m.blogspot.com/2012/08/tmil-full-movie-naan-ee.html

    ReplyDelete

நான் என் கருத்துகளைப் பதியவே (என் குரலைப் பதிவு செய்யவே) வலைப்பூப்பதிவுகளை இடுகிறேன்.

கண்ணியக்குறைவான மறுமொழிகளை வெளியிட இயலாது.

சில மறுமொழிகளுக்கு நான் பதிலளிக்கவில்லை என்றால், ஒன்று எனக்கு பதில் தெரியவில்லை அல்லது போராடிப் பயனில்லை (இந்தப் பழம் புளிக்கும்) என்ற எனது நிலையே.