எனது முந்தைய பதிவுகளில் ஒன்றான நெஞ்சம்
மறப்பதில்லை பதிவில் தேவையில்லாமல் மிஷ்கினைக் குறைத்து சொல்லிவிட்டோமோ என்று
முகமூடி படம் பார்த்த பிறகு தோன்றுகிறது. அந்தப் பதிவை எழுதும்போது நான் முகமூடி
படம் பார்க்கவில்லையே தவிர படத்தைப் பற்றிய வலைப்பூ பதிவர்களின் விமர்சனங்களைப்
படித்திருந்தேன். ஆகா.. படம் அவுட்டா, அதுக்கா இந்த சீன் போட்டாரு மிஷ்கின் என்று
நினைத்தேன். அதனால்தான் ஸ்ரீதரைப் பெருமைப்படுத்துவதாக நினைத்து மிஷ்கினை மட்டம்
தட்டியிருந்தேன். இதுவரை மிஷ்கின் இயக்கிய படங்களில் யுத்தம் செய், நந்தலாலாவைத்
தவிர மற்ற படங்கள் எனக்குப் பிடிக்காது அதனால் பழைய குருடி கதவை திறடி
கதையாகிவிட்டதோ என்று எண்ணி அப்படி பதிவிட்டிருந்தேன்.
இன்றுதான் முகமூடி படம் பார்க்க முடிந்தது. படம் பார்த்த பிறகு விமர்சனங்கள்
எல்லாம் மிஷ்கினை காழ்ப்புணர்ச்சியுடன் அணுகுவதாகவே எனக்குப் படுகிறது. அவர்
காப்பி அடித்தாரோ என்ன செய்தாரோ, ஆனால்... நன்றாக இயக்கியிருக்கிறார். குறிப்பாக
அவர் எடுத்திருக்கும் கேமரா கோணங்கள் சூப்பர்.
ஜீவாவை அதிகம் வேலை வாங்கியிருக்கிறார் இயக்குனர் என்பதை
ஜீவாவின் தோற்றமே நமக்குச் சொல்கிறது. உடலைத் திறந்து காட்டாமலேயே முறுக்கேறியிருக்கிறார்
ஜீவா என்பது நன்றாகத் தெரிகிறது.
செல்வாவை அழகாகப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர். அவர்
சொல்லும் பிளாஷ் பேக்கும் அதைப் படமாக்கியிருக்கும் விதமும் அற்புதம். செல்வாவும்
நரேனும் ஒரு காட்சியில் சண்டையிடுவது செயற்கையாகத் (பொருந்தாமல்) தெரிந்தாலும்,
நரேன் செல்வாவின் மாஸ்டரை எப்படிக் கொன்றார் என்று விபரித்து செல்வாவை
பலவீனப்படுத்துவது இயல்பாக இருக்கிறது. பெரும்பாலான படங்களில் இப்படி ஒரு வில்லன்
சொன்னால் ஹீரோவுக்கு எங்கிருந்தாவது சக்தி வந்து வில்லனைப் புரட்டிப் புரட்டி
எடுப்பார். மிஷ்கின் இயல்புகெடாமல் செல்வா பலவீனமாவதாகக் காட்டியிருக்கிறார்.
தாத்தா பாத்திரத்தில் கிரிஷ் கர்ணாடை நடிக்க வைத்திருக்க
வேண்டாம் என்பது எனது கருத்து. வலுவான பாத்திரங்களுக்கு கனக்கச்சிதமாகப்
பொருந்தும் அவர் இந்தப் படத்தில் அவ்வளவு எடுபடவில்லை. கிளைமாக்சில் அவரை வைத்து
காமெடியெல்லாம் பண்ணியிருப்பது ரசிக்கும்படியாக இல்லை.
ஹீரோயின் பூஜா ஹெக்டே அழகாகவே இருக்கிறார். தேவையான
நடிப்பை வெளிப்படுத்தவே செய்திருக்கிறார். ஒரு பதிவர் அவரை மொக்கை பிகரு என்று
சொல்லியிருப்பது கேவலமான விமர்சனமாகும். வலிய வந்து கட்டிப்பிடித்தாலும் அவரை
எனக்குப் பிடிக்காது என்று வேறு எழுதியிருக்கிறார். இவர்கள் அழகுக்கு ஏதாவது ஒரு
இலக்கணத்தை வைத்துக்கொண்டு ஹீரோயின் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். அப்படி
இல்லாவிட்டால் மொக்கை என்று தீர்மானிக்கிறார்கள். எல்லாரும் ஹீரோதான், எல்லாரும்
ஹீரோயின்தான். ஒரு படத்துல சுஹாசினி வருவாரே "என் புருசன்தான் எனக்கு
மட்டும்தான்" னு அத மாதிரி இருந்தாலே ஹீரோயின்தான். இந்தப் பொண்ணு அழகாத்தானே
இருக்கு. அப்புறம் ஏன் அப்படி சொல்றாங்கன்னு தெரியல.
நரேன் அவரது பாத்திரத்தை Justify செய்திருப்பதாகவே நான் கருதுகிறேன். பேட்மேனில் ஏதோ ஒரு பார்ட்டில் வரும்
ஜோக்கர் பாத்திரத்தை ஒத்து அவர் நடத்திருப்பதாக எனக்குப் படுகிறது.
இதுவெல்லாம் ஒரு சூப்பர் ஹீரோ படமா என்று கேட்கிறார்கள்.
சூப்பர் ஹீரோ என்றால் பறக்குனும் வலைவிடனும்னு இலக்கணம் வகுத்து வைத்துக்கொண்டு
படத்தைப் பார்த்தால் அப்படித்தான் இருக்கும். இயல்பான ஒரு மனிதர், மனித சக்திக்கு
உட்பட்டு மற்ற மனிதர்களால் சாதிக்க முடியாததைச் சாதிக்கிறார் என்றால் அவரும் ஒரு
சூப்பர் ஹீரோதானே. அப்படி ஏன் ஏற்றுக் கொள்ளக்கூடாது. சூப்பர் ஹீரோ என்றால் பேண்டுக்குமேல்தான் ஜட்டிபோட வேண்டும் என்பதையும் மாற்றியிருந்தால் இன்னும் இயல்பாக இருந்திருக்கும்.
ஜீவாவின் நண்பராக வருபவர் கடைசி வரை பாத்து மச்சி, பாத்து
மச்சி என்று சொல்லி சொல்லியே இறக்கும் காட்சி கண்கலங்க வைக்கிறது.
காவல்நிலையத்தில் தங்கள் மாஸ்டர் செல்வாவை காவல்துறை அதிகாரி
பத்ரி அடிக்கும்போது பொங்கியெழும் சிஷ்யர்கள் செல்வா சமாதானப்படுத்தியது
அழுதுகொண்டே அடிவாங்கிக்கொண்டே நீங்க போங்க மாஸ்டர் நீங்க போங்க என்று சொல்வது
நெஞ்சை நெகிழ வைக்கிறது.
படத்தில் குங்பூ பைட்ஸ் எல்லாம் நன்றாக வந்திருக்கிறது.
நரேன்தான் கொஞ்சம் வேகம் குறைவு, மற்றபடி வில்லத்தனம் நன்றாகவே வருகிறது அவருக்கு.
நான்கைந்துமுறை சூப்பர், ஸ்படைர்மேன், பேட்மேன், ஐயர்ன்மேன் என்று சொல்ல
வைத்திருக்க வேண்டாம் அவரை. அதை அவர் பேசும்போதெல்லாம் எரிச்சல்தான் வருகிறது.
ஜீவாவை அத்தனை முறை பார்த்தும் காதல் வராத பூஜா, ஜீவா
............ போவதைப் பார்த்தபிறகு காதல் கொள்வதாக வைத்திருப்பது வக்கிரமாகவே
படுகிறது.
ஒவ்வொரு பெருநகரத்திலும் 9 மாதம் மட்டுமே தங்கி
கொள்ளையடிக்கும் ஒரு கும்பல், தமிழ்நாட்டில் ஒரு பெரிய மார்ஷியல் ஆர்ட்ஸ்
பள்ளியையே நடத்துவது நம்பமுடியவில்லை.
பாடல்கள் இந்தப் படத்திற்கு அவசியமே இல்லை. பாடலே இல்லாமல்
இருந்திருக்கலாம். பாரில் வரும் பாடல் கண்ணதான் காரைக்குடி பாட்டை
ஞாபகப்படுத்துகிறது. ஒரு பாடல் காட்சியில் ஹீரோயினை அதிகக் கவர்ச்சி (ஆபாசமாக)
காட்ட வைத்திருப்பதாகவே நினைக்கிறேன். பாடல்கள் வரும் சந்தர்ப்பமும் சரியானதாகப் படவில்லை. பின்னணி இசை நன்றாக இருக்கிறது.
இன்னும் ஒரு குறையாக எனக்குப் படுவது. ஏதோ ஒரு நாட்டில் இருந்து வந்த குங்பூவைப் பிரபலப்படுத்துவதைவிட்டு, தமிழ்நாட்டு வித்தைகளில் எதையாவதோ அல்லது இந்திய அளவில் உள்ள வித்தைகளில் எதையாவதோ கருவாக வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அது ஒரு குறையே
ஆனால் மொத்தத்தில் முகமூடி சூப்பர் ஹீரோதான். அதில் மாற்றுக்கருத்தில்லை.
No comments:
Post a Comment
நான் என் கருத்துகளைப் பதியவே (என் குரலைப் பதிவு செய்யவே) வலைப்பூப்பதிவுகளை இடுகிறேன்.
கண்ணியக்குறைவான மறுமொழிகளை வெளியிட இயலாது.
சில மறுமொழிகளுக்கு நான் பதிலளிக்கவில்லை என்றால், ஒன்று எனக்கு பதில் தெரியவில்லை அல்லது போராடிப் பயனில்லை (இந்தப் பழம் புளிக்கும்) என்ற எனது நிலையே.